Home City பெருங்குடி குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து…

பெருங்குடி குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து…

0

பெருங்குடி குப்பை கிடங்கில் 27ஆம் தேதி புதன்கிழமை மாலை அன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் மிகவும் போராடினர்.

சென்னை மாநகராட்சியில் நாள் ஒன்றுக்கு, 51 லட்சம் கிலோ திடக்கழிவுகள் சேகரமாகின்றன. அவை மக்கும், மக்காத குப்பையாக தரம் பிரிக்கப்பட்டு, மறுசுழற்சி செய்யும் வகையில் பதனிடும் மையங்களுக்கு அனுப்பப்படுகின்றன. மீதமுள்ள கழிவுகள், பெருங்குடி கிடங்கில் கொட்டப்படுகிறது. அக்கிடங்கு, 225 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில், பல ஆண்டுகளாக குப்பை கொட்டப்படுகிறது. இதனால், அங்கு, 34.02 லட்சம் கனமீட்டர் அளவில் குப்பை உள்ளது.

இந்த நிலையில், 27ஆம் தேதி புதன்கிழமை மாலை அன்று மறு சுழற்சி செய்யும் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அது, குப்பை கிடங்கு முழுதும் பரவி கொழுந்து விட்டெரிந்தது. காற்றின் வேகம் காரணமாக, தீயிலிருந்து வெண்புகை வெளியேறி சுற்று வட்டார பகுதிகளில் பரவியது. இதனால், அருகில் வசிப்போர் கண் எரிச்சல், மூச்சுத்திணறலால் கடும் அவதிக்குள்ளாகினர்.

தகவல் அறிந்து, துரைப்பாக்கம், மேடவாக்கம், ராஜ்பவன், கிண்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, தீயணைப்பு வாகனங்கள் குப்பை கிடங்கிற்கு விரைந்தன. கொழுந்து விட்டெரிந்த தீயால், இரவு வரை தீயணைப்பு வீரர்களும் கண் எரிச்சலால் கடும் அவதிக்குள்ளாகினர். தொடர்ந்து தீ பரவாமல் இருக்க தேவையான முயற்சிகளையும் மேற்கொண்டு வந்தனர்.

27ஆம் தேதி புதன்கிழமை இரவு வரை தீயை கட்டுப்படுத்தும் முயற்சி தொடர்ந்து நடைபெற்றது. திறந்தவெளி என்பதாலும், சதுப்பு நிலத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதாலும், தீ தொடர்ந்து பரவியது.