9-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) இலங்கையில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த தொடரில் இன்று 2 அரைஇறுதி ஆட்டங்கள் நடக்கின்றன.
முதலாவது அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் இந்தியா - வங்காளதேச அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
அதன்படி வங்காளதேச அணியின் தொடக்க வீராங்கனைகளாக திலாரா அக்டர்- முர்ஷிதா காதுன் களமிறங்கினர். முதல் ஓவரில் அக்டர் 6 ரன்னிலும் 3-வது ஓவரில் முர்ஷிதா 4 ரன்னிலும் அடுத்து வந்த இஷ்மா தன்ஜிம் 8 ரன்னிலும் ரேணுகா சிங் பந்து வீச்சில் வெளியேறினர்.
இதனை தொடர்ந்து ருமானா அகமது 1, ரபேயா கான் 1, ரிது மோனி 5 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். ஒரு முனையில் விக்கெட்டுகள் இழந்தாலும் கேப்டன் நிகர் சுல்தானா பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோர் 50 கடக்க உதவினார்.
தொடர்ந்து விளையாடிய அவர் 32 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் வங்களாதேசம் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் ரேணுகா சிங் 4 ஓவரில் 10 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.