Home City மெட்ரோ ரயில் நிலைய கட்டுமான பணியால் போக்குவரத்து மாற்றம்…?

மெட்ரோ ரயில் நிலைய கட்டுமான பணியால் போக்குவரத்து மாற்றம்…?

0

ராயப்பேட்டை மெட்ரோ ரயில் நிலைய கட்டுமான பணிக்காக, மருத்துவமனை – மணிக்கூண்டு இடையே மட்டும், சாலை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது. சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது கட்ட திட்டத்தில், மாதவரம் – சிறுசேரி சிப்காட் இடையே, 45.8 கி.மீ., மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. இப்பாதையில், முதற்கட்டமாக மாதவரம் – தரமணி இணைப்பு சாலை வர, பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளன.

சுரங்க நிலையங்கள், பாதை கட்டுமான பணிகளுக்கு ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்பட்டு, கட்டுமான ஆரம்பக்கட்ட பணிகள், சுரங்க நிலையங்கள் கட்டுவதற்கு பாதுகாப்பு சுற்றுச்சுவர்கள் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. இத்திட்டத்தில், ராயப்பேட்டை அரசு மருத்துவமனை எதிரில் மெட்ரோ நிலையம் சுரங்கத்தில் கட்டப்பட உள்ளது.

இதற்கான இடம் கையகப்படுத்தப்பட்டு, நிலையம் கட்டும் இடத்தில், தற்காலிக இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. நிலையம் கட்டுமான பணிக்கான ஆரம்பகட்ட பணிகள் முடிந்து, சுரங்க நிலையம் அமைக்க, பாதுகாப்பு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி துவக்கப்பட உள்ளது.

இதற்காக, ராயப்பேட்டை மேம்பாலத்தில் இருந்து மணிக் கூண்டு நோக்கி செல்லும் வெஸ்ட் காட் சாலையில், கட்டுமான பணிக்காக நிலம் எடுத்துக் கொள்வதற்காக, ஒரு பகுதி சாலையின் மையத்தடுப்பு வரை, தற்காலிக இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளன.

மணிக்கூண்டில் இருந்து ராயப்பேட்டை மருத்துவமனை நோக்கி செல்லும் சாலை நெடுகிலும், இரண்டு பகுதியாக தற்காலிக இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளன.

இச்சாலையில் வாகனங்கள் இருவழியிலும் சென்று, வருவதற்கு ஏற்பாடு நடக்கிறது. இப்பணி முடிந்ததும், நிலையம் கட்டும் இடத்தில், வாகனப் போக்குவரத்து குறித்து, முறையான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.