Home City மக்கள் பயன்பாட்டிற்க்காக வேளச்சேரி பிரதான சாலை திறக்கப்பட்டது…

மக்கள் பயன்பாட்டிற்க்காக வேளச்சேரி பிரதான சாலை திறக்கப்பட்டது…

0

சென்னையில் தொடர் பருவ மழை காரணமாக ஒரு வாரமாக மூடப்பட்டிருந்த வேளச்சேரி பிரதான சாலை 16ஆம் தேதி செவ்வாய் கிழமை அன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் திறந்து விடப்பட்டது.

இதனால், மக்கள் சிரமமின்றி பயணித்தனர். கிண்டியில் இருந்து, காந்திசாலை மற்றும் தண்டீஸ்வரம் வழியாக, விஜய நகர் நோக்கி செல்லும், வேளச்சேரி பிரதான தார் சாலை, 60 அடி அகலம் கொண்டது.

சென்னையில் பல்வேறு பகுதியில் இருந்து, வேளச்சேரி வழியாக செல்லும் அனைத்து பேருந்துகள், இந்த சாலை வழியாக செல்கின்றன.

இந்த சாலையில், வேளச்சேரி மின் வாரிய அலுவலகம் மற்றும் காவல் நிலையம் இடைப்பட்ட 250 அடி நீள பகுதி மிகவும் மோசமாக இருந்தது. சாலை, அடிக்கடி சேதமடைவதால், இந்த பகுதியில் சிமென்ட் சாலை அமைக்க, மாநகராட்சி முடிவு செய்தது. எனவே 4ஆம் தேதி இரவு, சாலை போடும் பணி துவங்கியது.

பருவமழை, 6ஆம் தேதி முதல் பெய்ததால், பணி நிறுத்தப்பட்டு, சாலை மூடப்பட்டது. இதனால் மாநகர பேருந்துகள் உட்பட, அனைத்து வாகனங்களும், விரைவு சாலை வழியாக திருப்பி விடப்பட்டன. இதனால், காந்திசாலை மற்றும் தண்டீஸ்வரம் நகர் சுற்று வட்டார மக்கள், இரண்டு கிலோ மீட்டர் நடந்து, சென்று பேருந்து ஏறி செல்ல வேண்டி இருந்தது. மாநகர பேருந்துகள், ரயில் நிலையத்தை சுற்றி சென்றன.

இதனால், எரிபொருள் செலவு அதிகரித்ததுடன், பொதுமக்கள் பல்வேறு வழிகளில் சென்று சிரமப்பட்டனர். இதனை மாநகராட்சி கருத்தில் கொண்டு மூடப்பட்ட வேளச்சேரி பிரதான சாலையை 16ஆம் தேதி செவ்வாய்கிழமை அன்று மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் தற்போது மாநகர பேருந்துகள், இந்த வழியாக செல்கின்றன. இதனால் மக்கள் அனைவரும் சிரமம் இல்லாமல், பேருந்து ஏறினர். சாலை மீண்டும் பயன்பாட்டுக்கு வந்ததால், வாகன ஓட்டிகளுக்கு ஏற்பட்ட அலைச்சல் நீங்கியது.