தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை அரசு இந்த மாதம் முதல் செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தில் இணைய தமிழகம் முழுவதும் ஒரு கோடியே 63 லட்சம் பெண்கள் விண்ணப்பித்தனர். விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு தகுதியான விண்ணப்பதாரர்களை அடையாளம் கண்டு தேர்வு செய்துள்ளனர். ஒரு வாரமாக நடந்த இந்த கள ஆய்வு நிறைவடைந்து விட்டது. மாதம் தோறும் உரிமைத் தொகை அவரவர் வங்கி கணக்கிலேயே செலுத்தப்படும். எனவே பயனாளிகளுக்கு வங்கி கணக்கு அவசியம். வங்கி கணக்கு இல்லாதவர்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கி அல்லது கூட்டுறவு வங்கிகளில் வங்கி கணக்கு தொடங்க அறிவுறுத்தப்பட்டனர். தற்போது தகுதியான பெண்களுக்கு வழங்குவதற்கான ஏ.டி.எம். கார்டு பிரத்யேகமாக தயாராகி வருகிறது. ரூபே கார்டாக வழங்கப்படும். இந்த கார்டு மூலம் பணத்தை எடுத்து கொள்ள முடியும். இந்த திட்டத்தை அண்ணா பிறந்தநாளான வருகிற 15-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். முதலமைச்சர் தொடங்கி வைத்ததும் அனைவரது வங்கி கணக்குக்கும் ரூ.1000 சென்றுவிடும். அடுத்த மாதம் முதல் மாதந்தோறும் 1-ந்தேதி வந்துவிடும். குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் ஏ.டி.எம். கார்டுகள் ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அவர்கள் பகுதி ஆர்.டி.ஓ.விடம் சென்று முறையிட்டு நிவாரணம் தேடிக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.