Home City பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு 4 புதிய வரவுகள்…

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு 4 புதிய வரவுகள்…

0

பள்ளிகரணை சதுப்பு நில பகுதியில் செந்தலை பூங்குருவி, கரும்பிடரி அரச ஈ பிடிப்பான், பச்சை கதிர் குருவி, ஆற்று ஆலா ஆகிய, அரிய வகை பறவைகள் புதிய வரவாக கணக்கெடுப்பில் பதிவாகி உள்ளன.

சென்னை வேளச்சேரி முதல் மேடவாக்கம் வரை, 1,730 ஏக்கரில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பரவி உள்ளது. இதை ஒட்டி, 247 ஏக்கர் நிலம் வெளிச்சுற்று பகுதியாக பரவி உள்ளது. வலசை பறவைகள் அதிக அளவில் வந்து செல்வது, அரிய வகை உள்ளூர் பறவைகளும், பல்வேறு நீர் வாழ் உயிரினங்களும், தாவர இனங்களும் இங்கு காணப்படுகின்றன. சூழலியல் முக்கியத்துவம் அடிப்படையில் இப்பகுதியை பாதுகாப்பது, மேம்படுத்துவதற்கு வனத்துறை பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

பள்ளிக்கரணையின் சூழலியல் கூறுகளை கண்காணிக்கும் வகையில் வனத்துறையும், “தி நேச்சர் டிரஸ்ட்” அமைப்பினரும், 12 ஆண்டுகளாக பறவைகள் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர். இங்கு வந்து செல்லும் பறவைகளின் எண்ணிக்கை ஆவணப்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை இங்கு, 186 வகை பறவைகள் வருகை குறித்த பதிவுகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதில் மார்ச் மாத கணக்கெடுப்பில் புதிதாக, செந்தலை பூங்குருவி, கரும்பிடரி அரச ஈ பிடிப்பான், பச்சை கதிர் குருவி, ஆற்று ஆலா ஆகிய நான்கு புதிய வரவுகள் பதிவாகி உள்ளன.

இது குறித்து “தி நேச்சர் டிரஸ்ட்” அமைப்பின் சந்திரகுமார், திருநாரயணன் ஆகியோர் கூறியதாவது: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், நீர் நிலை சார்ந்த பறவைகள் தான் வரும் என்ற பொதுவான எண்ணம் உள்ளது. ஆனால், தற்போது அடர் வனப்பகுதியில் காணப்படும் பறவைகளும் இங்கு வருவது தெரியவந்துள்ளது. அடர் வனப்பகுதிகளில் காணப்படும் செந்தலை பூங்குருவி, கரும்பிடரி அரச ஈ பிடிப்பான், பச்சை கதிர் பல பறவைகள், பள்ளிக்கரணையில் முதல் முறையாக காணப்படுவது ஆச்சரியம் அளிக்கிறது. அரிய வகை என பட்டியலிடப்பட்ட பறவைகள் வந்துள்ளது, சதுப்பு நிலத்தின் சூழலியல் முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது.


இதே போன்று வலசை பறவைகள் வடக்கு நோக்கி திரும்பி செல்லும் நேரத்தில் கொண்டை குயில், வெளிர் நிற பூனைப்பருந்து, போன்ற பறவைகள் காணப்படுவது, புதிய தகவலாக உள்ளது. இவற்றின் வருகைக்கு ஏற்ப, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் தன்மையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் ஆராயப்பட வேண்டியதாக உள்ளது. என அவர்கள் கூறினர். தொடர்ந்து அரிய வகை பறவைகள் குறித்த பதிவுகள் அதிகரித்து வரும் நிலையில், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாப்பதற்கான பணிகளை வனத்துறை அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர். இதற்கு, பொது மக்களின் முழுமையான ஒத்துழைப்பு அவசிய தேவையாக உள்ளது.