Saturday, May 4, 2024

சனிக்கிழமை விரதத்தை கடைபிடிக்கும் முறை!

  • நினைத்த காரியங்கள் நிறைவேற வேண்டும் என்பதற்காகவே விரதங்கள் இருக்கின்றோம். அதிலும் பெரும்பாலும் செல்வம், ஆரோக்கியம், ஆயுள் இவை மூன்றும் தான் வேண்டுதலுக்கான முக்கிய காரணிகளாக இருக்கும். இவை அனைத்தும் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்க சனிக்கிழமை விரதத்தை கடைபிடிக்க வேண்டும். நவகிரகங்களில் ஒருவரான சனி பகவானே ஆயுள்காரகன் ஆவார். அவரின் ஆதிக்கத்தை பொறுத்தே ஒருவரின் ஆயுட்காலம் நிர்ணயமாகிறது.
  • ஆனால் சனி கிரகத்தை ஆட்சி செய்யும் பெருமாளே இந்த சனி கிரகத்திற்க்கு அதிபதியாவார். எனவே சனிக்கு அதிபதியான பெருமாளை நினைத்து அவருக்கு உகந்த நாளான சனிக் கிழமைகளில் விரதம் மேற்கொண்டால் நீங்கள் நினைத்த காரியங்கள் நிச்சயம் நிறைவேறும். அதிலும் ஆயுள் பலன் அதிகரிக்க சனி விரதம் ஒன்றே மிகவும் உகந்ததாகும்.
  • சனிக்கிழமை விரதத்தை 11 வாரங்கள் முதல் 51 வாரங்கள் வரை தொடர்ந்து கடை பிடித்தால், உங்களிடம் பாவ பலன்கள் நீங்கி நல்ல பலன்கள் உண்டாகும். அதிலும் விசேஷமாக பெருமாளுக்கு உரிய புரட்டாசி மாதங்களில் வரும் சனிக் கிழமைகளில் விரதங்கள் மேற்கொண்டால் அவை ஒரு வருடத்திற்கான நற்பலன்களை உங்களுக்கு கொடுக்கும்.
  • சனிக்கிழமை விரதம் என்பது மிகவும் எளிமையான ஒன்றாகும். காலை எழுந்து, குளித்துவிட்டு பூஜை செய்து, அதன்பின் காலை மற்றும் மதிய வேளைகளில் எந்த உணவு வகைகளும் உண்ணாமல், பால், பழம், தண்ணீர் மட்டும் குடித்து விரதம் மேற்கொள்ள வேண்டும். பின்னர் மாலையில் சனிபகவானுக்கு எள் எண்ணை தீபம் ஏற்றி வழிபட வேண்டும். பிறகு இரவு வேளை மட்டும் ஏதேனும் ஒரு எளிமையான உணவை சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம். அதேபோல் சனிக்கிழமை தினங்களில் அசைவத்தை தவிர்த்து விடுதல் என்பது மிகவும் நல்லதாகும்.
  • அதுமட்டுமல்லாமல் சனிக்கிழமை நாளில் மாலைநேரத்தில் கோவிலுக்கு சென்று, சனிபகவானுக்கு கருப்பு வஸ்திரம் சாத்தி, கருப்பு எள் மற்றும் வேகவைத்த சாதம் இவற்றை படைத்து, தீபமேற்றி வழிபட்டு வந்தால் உங்களுக்கு நல்ல நற்பலன்கள் கிடைக்கும்.

Latest article