Sunday, May 19, 2024

3 வது முறையாக உயரும் தனியார் பால் விலை…

சென்னை:  தமிழகத்தில்  தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.4 வரை உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளது  மக்களிடையே அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

 தமிழகத்தில்   நாள்தோறும் சுமார் 2.25 கோடி லிட்டர் பால் உற்பத்தி நடைபெறுகிறது. இதில் அரசின் ஆவின் நிறுவனம் சுமார் 38.26  லட்சம்  லிட்டர்  பாலை கொள்முதல்  செய்கிறது.  மீதமுள்ள பாலை  தமிழகம் மற்றும்  ஆந்திராவை சேர்ந்த  தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்கின்றன.

 கடந்த  2020ம் ஆண்டு தனியார்  பால்  விற்பனை விலை லிட்டருக்கு ரூ.6 வரை உயர்த்தப்பட்டது.  ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது விற்பனை சரிந்து விட்டதாக கூறி அனைத்து தனியார்  பால்  நிறுவனங்களும் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.18 வரை குறைத்தது. ஆனால் விற்பனை     விலை      குறைக்கப்படவில்லை. நடப்பு ஆண்டில் பிப்ரவரி மாதம்  ஒரு முறையும்,  ஏப்ரல் மாதத்தில்  ஒருமுறையும்  பால் மற்றும் தயிர்  விற்பனை  விலையை லிட்டருக்கு தலா ரூ.4 உயர்த்தியது. இந்த  நிலையில்  நடப்பு  ஆண்டில் 3வது  முறையாக தனியார் 

பால் விற்பனை விலை உயர்த்தப்படுகிறது. 11.8.2022 அன்று முதல் சீனிவாசா பால் நிறுவனம் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி இருக்கிறது. ஹட்சன் நிறுவனம் நாளை முதல் பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு ரூ. 4 உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

இதனால்   பால்   சார்ந்த உணவு பொருட்கள் அனைத்தும் விலை உயரும் நிலை உள்ளது. எனவே தனியார் நிறுவனங்களின் இந்த  தன்னிச்சையான விலை உயர்வு அறிவிப்பை தமிழக அரசு தலையிட்டு உடனடியாக  தடுத்து  நிறுத்த  வேண்டும்  என்று பால் முகவர்கள்,   தொழிலாளர்கள் நலச்சங்கம்  அரசுக்கு  கோரிக்கை விடுத்துள்ளது. 

Latest article