Friday, May 3, 2024

தை மாதத்தின் சிறப்புகள்…

ரதசப்தமி
மக்கள் நல்ல விளைச்சலுக்கு உதவிய சூரிய கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக தை மாதத்தின் முதல் நாளை தைப்பொங்கலாகக் கொண்டாடுகின்றனர். தை மாத வளர்பிறையில் வரும் சப்தமி திதியானது ரதசப்தமியாக இந்துக்களால் கொண்டாடப்படுகிறது. அன்றைக்கு தான் சூரியன் தன்னுடைய வடதிசை பயணத்தை தொடங்குகிறார். ரத சப்தமி நாளில் விரதம் மேற்கொள்வோருக்கு உடல் ஆரோக்கியம், நோய் இல்லாமை, புத்திரப்பேறு, நிலையான செல்வம், பகைவர்களையும் வெல்லும் சக்தி, வெற்றி, தானியம் மற்றும் புண்ணியம் ஆகியவை கிடைக்கும் என்பது நம்பிக்கை.

குளிரும் பனிகாலம்
தை மாதம் தரையும் குளிரும் என்று தை மாதத்தைப் பற்றியும் தை மாத குளிரையும் பனியையும் குறிப்பிட்டு சொல்வார்கள். மற்ற மாதங்களில் எல்லாம் தரையில் படுத்து புரண்டாலும், தை மாதம் முதல் பங்குனி மாதம் வரை, நம்மால் வெறும் கட்டாந்தையில் கால் வைக்கக்கூட முடியாது. அந்த அளவுக்கு குளிரும் பனியும் நம்மை உறைய வைக்கும்.

மகர மாதம்
இந்த மாதத்தினை மகர மாதம் என்றும் அழைப்பார்கள். மகரத்திற்குள் சூரியன் நுழைவதே மகர மாதம். ஜோதிடத்தில் பார்க்கும் போது, பூமியை இரண்டாகப் பிரிப்பது போல் ஆகாயத்தை இரண்டாக பிரிப்பார்கள். அதை சூரியன் பகுதி, சந்திரன் பகுதி என்றும் கூறுவார்கள். அதில் மகரத்தில் இருந்து கடகம் வரை சந்திரனுடைய பகுதிக்குள் வரும், அவைகள் சந்திராதிக்கத்திற்குரியன. இந்த மாதத்தில் இருந்து சூரியன் பகுதி துவங்குகிறது. இந்த மாதத்தில் சூரியப் பகுதி வலிமையடைகிறது.
அதாவது உத்திரயாணப் புண்ணிய காலம் துவங்குகிறது. அதாவது காலத்தை இரண்டு அயனமாகப் பிரித்துள்ளனர். அவை தக்ஷாயணம் உத்திராயணம். தக்ஷாயணம் என்பது தெற்கு திசையை குறிக்கும். உத்திராயணம் என்பது வடக்கு திசையையும் குறிக்கும். அதனால்தான் இந்த காலம் எல்லா வகையிலும் சிறப்புடையது. உத்திராடம் சிறந்த நட்சத்திரம்.

இலையுதிர் காலம் அறுவடைக்கு உகந்த மாதம்
அந்த நேரத்தில்தான் பல விண்மீன்கள் சூரியனையும், சந்திரனையும் சூழ்ந்திருக்கும். மலையாளத்தில் எடுத்துக் கொண்டால் இதனை மகர ஜோதி என்று அழைக்கின்றனர். மேலும் தை மாத தொடக்கம் இலையுதிர் காலத்தின் தொடக்கம் என்பதால், அது நாள் வரையிலும் விளைவித்த பயிர்கள் முற்றி அறுவடைக்கு தயாராகி இருக்கும். அறுவடையை தொடங்காவிட்டால், விளைவித்த பயிர்கள் அனைத்துமே பனியில் வீணாகி விடும் என்று உணர்ந்தே நம் முன்னோர்கள் தை மாதத்தை அறுவடை மாதம் என்று கணித்து வைத்திருந்தனர்.

தை பூசம்
தை மாதத்தில் வரும் பௌர்ணமியோடு கூடிய பூச நட்சத்திரத்தில் தைபூசம் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சிவபெருமான் மற்றும் முருக்கடவுளுக்கு வழிபாடு நடத்தப்படுகிறது. உமையம்மை வேலவனுக்கு சக்தி வேலை வழங்கிய நாள் தைப்பூசம் என்றும் கருதப்பட்டு வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. இவ்விழா உலகெங்கும் உள்ள தமிழர்களால் சிறப்பாகக் இந்த தை மாதத்தில்தான் கொண்டாடப்படுகிறது.

தை அமாவாசை
உத்திராண்ய காலத்தின் முதல் மாதமான தை மாத அமாவாசையும், தட்சியாண காலத்தின் முதல் மாதமான ஆடி மாத அமாவாசையும், புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசையும் முன்னோர்களுக்கான வழிபாட்டிற்கு உகந்தவை எனக் கருதப்படுகின்றன. அதில் தை அம்மாவாசையில் முன்னோர்களுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு.

பொங்கல்
புதிய நெல்லில் இருந்து தயார் செய்யப்பட்ட அரிசியில் சர்க்கரை மற்றும் வெண் பொங்கல் ஆகியவற்றை தயார் செய்து பொங்கல், செங்கரும்பு, புதுமஞ்சள், பனங்கிழங்கு, காய்கறிகள், பருப்பு வகைகளை வைத்து பொங்கல் கொண்டாடுவர். 2வது நாள் உழவுத் தொழிலுக்கு உதவிய மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக தை மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் ஜல்லிக்கட்டு, உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். தை மூன்றாம் நாள் காணும் பொங்கலை மக்கள் கொண்டாடுகின்றனர்.

Latest article