Friday, May 17, 2024

அபிஷேகத்தின் ஆற்றல்

ஆலயங்களில் நடத்தப்படும் 16 வகை சோடச உபசாரங்களில் அபிஷேகமே மிக, மிக முக்கியத்துவமும் வலிமையும் வாய்ந்தது என்று ஆகமங்களில் கூறப்பட்டுள்ளது. தமிழில் திருமுழுக்கு என்று கூறப்படும் அபிஷேகத்துக்கு நம்முன்னோர்கள் 26 வகை திரவியங்களை பயன்படுத்தினார்கள்.

பிறகு அந்த திரவியங்களின் எண்ணிக்கை 18 ஆக குறைந்தது. தற்போது பெரும்பாலான ஆலயங்களில் 12 வகை திரவியங்களைக் கொண்டே அபிஷேகம் செய்யப்படுகிறது.

பொதுவாக ஒரு ஆலயம் அதிகாலை திறக்கப்பட்டதும் திருப்பள்ளி எழுச்சி முடிந்ததும் அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். நிறைய பக்தர்கள் கடவுளுக்கு நடத்தப்படும் அபிஷேகத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

12 வகை திரவியங்களை எள்எண்ணெய், பஞ்ச கவ்யம், பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கரும்புச்சாறு, பழரசம், இளநீர், சந்தனம், தண்ணீர் என்ற வரிசையில் அபிஷேகத்துக்கு பயன்படுத்தும் வழக்கம் உள்ளது.

ஒரு ஆலயத்தின் மூலவர் சிலை எந்த அளவுக்கு அருள் ஆற்றல் சக்தியை வெளிப்படுத்துகிறது என்பது, அந்த சிலைக்கு செய்யப்படும் அபிஷேகங்களின் அளவையும், சிறப்பையும் பொருத்தே அமையும்.

இந்த உண்மையை சங்க காலத்துக்கு முன்பே நம் மூதாதையர்கள் கண்டுபிடித்து விட்டனர். எனவே தான் ஆலயங்களில் மூலவர் சிலைக்கு அபிஷேகம் நடத்தப்படுவதற்கு அவர்கள் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தனர். அதோடு அபிஷேக பொருட்கள் தடையின்றி கிடைக்க நிலங்களை கோவில்களுக்கு எழுதி வைத்தனர்.

அபிஷேகங்களில் பல வகைகள் இருந்தாலும் மகா அபிஷேகம், அன்னாபிஷேகம், சங்காபிஷேகம் ஆகிய மூன்றும் சிறந்ததாகும். எந்த வகை அபிஷேகம் செய்தாலும் 24 நிமிடங்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று ஆகம விதிகளில் கூறப்பட்டுள்ளது. ஆனால் சில ஆலயங்களில் 2 நாழிகை அளவுக்கு (48 நிமிடங்கள்) அபிஷேகங்கள் செய்யப்படுவது உண்டு.

பதினெட்டு அபிசேகங்களும் அதன் பயன்களும் :-
எந்த பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்தால் என்ன பயன் பெறலாம் என்று நாம் பார்ப்போம்.

தீர்த்த அபிஷேகம் -மனசுத்தம்
எண்ணெய் -பக்தி
நெல்லிப்பொடி -நோய் நிவாரண்ம்
பால் அபிஷேகம் -சாந்தம்
மஞ்சள் பொடி -மங்கலம்
தயிர் -உடல் நலம்    நெய் -நல்வாழ்வு
பன்னீர் -புகழ்
நாட்டு சர்க்கரை -சோதிடம்
விபூதி -ஞானம்
சந்தனம் -சொர்க்க லோகம்
தேன் -குரல் வளமை, ஆயுள்
பழச்சாறு -ஜனவசீகரம்
பஞ்சாமிர்தம் - நீண்ட ஆயுள்
பஞ்ச கவ்யம் -பாவம் நீக்கல்
இளநீர் -புத்திரப் பேறு
அன்னம் - அரசு உதவி
மாப்பொடி -குபேர சம்பத்து

தயிர், பால், சந்தனம், தண்ணீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யும்போது மூலவர் சிலையில் அதிக அளவில் மின் கடத்தும் திறன் ஏற்படுவதை குற்றாலம் பராசக்தி கல்லூரி ஆராய்ச்சிக் குழுவினர் சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டு பிடித்தனர். அபிஷேகம் செய்ய, செய்ய கருவறையில் உள்ள காற்று மண்டலத்தில் எதிர் மின்னூட்டங்கள் அதிகரிப்பதையும் கண்டு பிடித்தனர்.

அபிஷேகம் காரணமாக கருவறையில் உள்ள காற்றில் அதிக ஈரப்பதம் இருக்கும். ஈரப்பதத்தில் ஒளி வேகம் அதிகமாக இருக்கும். அதனால்தான் அபிஷேகத்தின் போதும் தீபம் காட்டும்போதும் கருவறை காற்று மண்டலம் அயனியாக்கப்பட்ட மூலக்கூறுகளுடன் வெளியில் வருகிறது. அது பக்தர்களுக்கு உள்ளத்தில் பலத்தை ஏற்படுத்துவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

மேலும் அபிஷேகத்தின் போது ஓம் என்று தொடங்கி குருக்கள் சொல்லும் மந்திரம் கற்சிலை மீது பட்டு வெளியில் அலையாக வரும்போது தெய்வீக ஆற்றலை கொடுக்கிறது. அபிஷேகம் செய்யப்படும்போது நேர் அயனியும் எதிர் அயனியும் காற்றில் வந்து பக்தர்கள் உடலுக்குள் சென்று புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது.

நேர் அயனியை சிவமாகவும் எதிர் அயனியை சக்தியாகவும் நம் முன்னோர்கள் உருவகப்படுத்தி, அபிஷேகம் செய்யும்போது சிவசக்தியின் திருவிளையாடல் நடப்பதாக வரையறுத்துள்ளனர். இதை கருத்தில் கொண்டே, ஆலயத்தில் எப்போதும் தெய்வீக ஆற்றல் நிரம்பி இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நம் முன்னோர்கள் கருவறையில் இருந்து அபிஷேக திரவியங்கள் நேராக கோவில் திருக்குளத்தை சென்றடைய ஏற்பாடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு மூல மூர்த்திக்கும் ஒவ்வொருவித அபிஷேகம் மிகவும் உகந்தது. அதற்கு ஏற்ப பலன்கள் கிடைக்கும். பொதுவாக பாலாபிஷேகம் செய்வதை பெரும்பாலான பக்தர்கள் விரும்பி செய்வதுண்டு எல்லா கடவுளுக்கும் பாலாபிஷேகம் அடிக்கடி நடைபெறும்.
Previous articleதயிர் சேமியா
Next article

Latest article