Home City வேளச்சேரியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி: தமிழக முதல்வர் நேரில் ஆய்வு…

வேளச்சேரியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி: தமிழக முதல்வர் நேரில் ஆய்வு…

0

சென்னை வேளச்சேரியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கடந்த வாரம் செவ்வாய் கிழமை அன்று, வேளச்சேரியில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை நேரில் ஆய்வு செய்து, பணிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகள் மீண்டும் ஏற்படாத வகையில், மழைநீர் வடிகால்களை சீரமைத்திட 9 கோடியே 81 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது.

வடகிழக்கு பருவமழையால் கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சென்னை மற்றும் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்து, சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை துரிதமாக அகற்றிடவும், நிவாரண நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டு, பணிகள் துரிதமாக நடைபெற்றன.

அதன் தொடர்ச்சியாக, சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளிலிருந்து நிரந்தர தீர்வு காணும் வகையில் ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப்பணி அலுவலர் திருப்புகழ் தலைமையில் வெள்ள மேலாண்மை குழு அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

மேலும், வருகின்ற பருவ மழைக் காலங்களில் மழை வெள்ளப் பாதிப்புகள் ஏற்படாத வகையில் கடந்த ஆண்டுகளில் அதிக அளவில் நீர் தேங்கிய இடங்களில் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்து திட்டப் பணிகளை உடனடியாக தொடங்கிட உத்தரவிட்டார்.

அதனடிப்படையில், நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை தமிழக முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, பருவமழை காலத்தில் வெள்ள பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை விரைவாக முடித்திட உத்தரவிட்டார்.