R. ஆகாஷ் சந்தர் என்பவர் ‘இளம் சாதனையாளர்’ விருது பெற்றார்…

0
270

இந்த வாரம் நமது எக்ஸ்பிரஸ் வேளச்சேரி வழங்கிய ‘இளம் சாதனையாளர்’ விருதை பெற்றவர் R.ஆகாஷ் சந்தர் என்ற பதினோரு வயது சிறுவன். இவர் வேளச்சேரியைச் சேர்ந்தவர்.

தற்போது ஏழாம் வகுப்பு படிக்கும் இவர் சதுரங்கப் போட்டி, கணித வினாடி வினா, நடனப் போட்டி, கர்நாடக சங்கீத இசை போட்டி, அறிவியல் சோதனை போட்டி, பேச்சுப் போட்டி, யோகா, கராத்தே, நீச்சல் போட்டி, மாறுவேட சுற்று, திருக்குறள் போட்டி, ஓவியப் போட்டி, பேஷன் ஷோ, கிளே மோல்டிங், ஸான்ட் ஆர்ட், பெஸ்ட் அவுட் ஆப் வேஸ்ட், கீபோர்ட், புட்பால் டோர்ணமெண்ட், போட்டோகிராபி, மாரத்தான், ஓட்டப்பந்தயம் ஆகிய பல ரகமான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று அறுபத்து ஒன்பது பதக்கங்களும், இருபத்தோரு கோப்பைகளும், இரண்டு காசோலைகளும் வாங்கி குவித்துள்ளார்.

இவற்றுள் பள்ளி அளவிலான போட்டிகள் மற்றுமின்றி இடை நிலைப் பள்ளிகளுக்குள் நடைபெற்ற போட்டிகள், மாநில அளவிலான போட்டிகள் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளும் அடங்கும்.

இவர் அப்துல்கலாம் மெமோரியல் அவார்டு, வித்தக சிற்பி அவார்டு, ஞானச்சுடர் அவார்டு, மல்டி டேலண்டட் கிட் அவார்டு, ஸ்டார் கிட் அவார்டு, இன்டியாஸ் பெஸ்ட் கிட் அவார்டு போன்ற பல பட்டங்களை ஏற்கனவே பெற்றுள்ளார்.

சுமார் பத்து வயது நிரம்பும் முன்னமே கிட்டத்தட்ட நூறு வெற்றி பரிசுகளைப் பெற்று தன் வீட்டு வரவேற்பு அறையின் சுவற்றை பெருமையோடு அலங்கரித்த அந்த இளம் சாதனையாளர் ஆகாஷ் அவர்களிடம் தன் வெற்றிகளுக்கு பின்னால் இருக்கும் காரணத்தை பற்றி நம்மிடம் பகிர்ந்து கொள்ளுமாறு நமது நிருபர் கேட்டபோது, “இந்த வெற்றிகள் அனைத்தையுமே நான் என் முயற்சிகளுக்குக் கிடைத்த அனுபவங்களாகத் தான் பார்க்கிறேன். அதில் என் தாய் சரண்யாவின் உழைப்பையும், என் தந்தை ராஜேஷின் ஒத்துழைப்பையும் தான் என்னால் காண முடிகிறது. நான் ஒவ்வொரு போட்டியிலும் பங்கேற்கும் முன்பு என் தாய் என்னிடம் வந்து ‘நீ தைரியமாக களத்தில் இறங்கு. இதற்காக நீ பயிற்சி எடுத்துக்கொள்ள மேற்கொண்ட சிரமத்தை வீணாக்காத அளவு செயல்பட்டாலே போதும்.

வெற்றியோடு வந்தால் மகிழ்ச்சி!
அது கிடைக்காமல் போனால் எடுப்போம் அடுத்த முயற்சி!
எப்படி இருந்தாலும் உனக்கு என்னிடம் இருந்து கிடைக்கப் போகும் பரிசு உறுதி!” என்பார்.
அதனால் தான் என்னால் எல்லா போட்டிகளிலும் பயமின்றி கலந்துக் கொள்ள இயன்றது. அதுமட்டுமின்றி எப்போதுமே என்னை ஊக்குவிக்கும் எங்கள் பள்ளி முதல்வர் திருமதி கீதா கிருஷ்ணன் அவர்களும், எனது ஆசிரியர்கள் பலரும் இதற்கு மற்றொரு காரணம்.

நான் நூறு வெற்றிகளை பெற்றுள்ளேன் என்றால் அதற்காக நான் இருநூறு தோல்விகளை கடந்து வந்திருக்கிறேன் என்பது மறுக்க முடியாத உண்மை. என் தோல்விகளை கண்டு கேலி செய்யாமல் எனக்கு உறுதுணையாக இருந்து தோள் கொடுத்த என் தங்கை சிந்தியாவும் ஒரு முக்கிய காரணம்,” என்று தன் திறமைகளை பற்றி தற்பெருமை அடித்துக் கொள்ளாமல், பணிவு என்று கூட சொல்ல முடியாத அளவுக்கு சகஜமாக கூறிவிட்டு, பின்னர் அடுத்த கேள்விக்காக அமைதியாகக் காத்திருந்தார்.

அந்த உயர்ந்த உள்ளம் கொண்ட சிறுவனின் வருங்கால லட்சியம் என்னவென்பது தான் நம்முடைய நிருபரின் அடுத்த கேள்வியாக இருந்தது அதற்கு அவர் ‘தற்சமயம் என்னுடைய விருப்பம் என்னவென்றால் நான் ஒரு மருத்துவராக பணிபுரிய வேண்டும் என்பது தான். வியாதிகளை வியாபாரம் ஆக்காமல் நோய் தீர்க்கும் நல்ல நண்பராக வலம் வரவேண்டுமென்று விரும்புகிறேன்.

ஒருவேளை வருங்காலத்தில் இதை விட உன்னதமான ஒரு துறையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தாலோ அல்லது என்
மனம் அவ்வாறு விரும்பினாலோ என்னை அதன்படியே நடந்து கொள்ளுமாறு என் பெற்றோர் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து இருக்கிறார்கள்” என்றார்.

இத்தகைய பிரம்மிப்பான பதில்களைத் தந்து நமது நிருபரை வியக்கச் செய்த ஆகாஷீக்கு இந்த விருதினை வழங்கியதில் எங்களது எக்ஸ்பிரஸ் வேளச்சேரி குழு மிகவும் பெருமைப்படுகிறது. அவர் மென்மேலும் பல சாதனைகளைப் புரிந்திடவும் அவரது விருப்பங்கள் அனைத்தும் வெற்றி பெறவும் எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள். மேலும் அந்த சிறுவனின் பெற்றோருக்கு எங்களுடைய பாராட்டுக்கள்.

இவரைப் போன்ற இளம் சாதனையாளர்களை ஊக்குவித்து உலகறியச் செய்ய வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள் உங்கள் வீட்டிலும் இதே போல் குறைந்த பட்சம் 10 பரிசுகளைப் பெற்ற பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளை பற்றிய தகவல்களை ஆதாரங்களோடு எங்களுக்கு தெரிவிக்க வேண்டிய புலனம் எண் 7305837388. வேளச்சேரியை சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான் இந்த வாய்ப்பு வழங்கப்படும் என்று இல்லை அனைத்து நகரங்களைச் சேர்ந்தவர்களும் இதன் மூலம் பயனடையலாம்.