சென்னை வேளச்சேரியில் தடையை மீறி, மழை நீர் தேங்காத புதிய சாலையை சேதப்படுத்தி, கழிவு நீர் பாதை அமைத்த குடிநீர் வாரியம் மீது, மாநகராட்சி போலீசில் புகார் அளித்தது. அடையாறு மண்டலம் 178வது வார்டு, வேளச்சேரி திரவுபதியம்மன் கோவில் தெரு, 30 அடி அகலம் கொண்டது.
இந்த தெரு சாலை, ஆறு மாதங்களுக்கு முன் புதுப்பிக்கப்பட்டது. இங்கு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கழிவு நீர் குழாய் சேதமடைந்துள்ளது. அப்போது, அப்பகுதி மக்கள் புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. மழையால் இரண்டு நாட்களாக, ஆழ்துளை மூடி வழியாக கழிவு நீர் வெளியேறியது.
இந்த கழிவு நீரை, பக்கத்திலுள்ள ஆழ்துளையில் விட வாரியம் நடவடிக்கை எடுத்தது. இதற்காக, ஆறு மாதத்திற்கு முன் போடப்பட்ட சாலையில், முக்கால் அடி அகலம், நூறடி நீளத்தில் பள்ளம் தோண்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கு, மாநகராட்சி எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், மழைநீர் தேங்காத பகுதி என்பதால், மோட்டார் மூலம் கழிவு நீரை, அருகிலுள்ள ஆழ்துளையில் விட ஆலோசனையும் வழங்கப்பட்டது. இதை குடிநீர் வாரிய அதிகாரிகள் கேட்கவில்லை.
தடையை மீறி, சாலை மைய பகுதி வழியாக துண்டித்து, அதன் வழியாக கழிவு நீர்பாதை அமைத்து வடியச் செய்தனர்.
இதனால், புதிய சாலை நாசமடைந்தது. இதையடுத்து, தடையை மீறி, புதிய சாலையை நாசப்படுத்திய குடிநீர் வாரியம் மீது, மாநகராட்சி அதிகாரிகள், வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். குடி நீர் வாரிய அதிகாரிகளிடம், போலீசார் விசாரிக்கின்றனர்.