சென்னை மாநகராட்சியின் மாதாந்திர கவுன்சில் கூட்டம், மேயர் பிரியா தலைமையில் நேற்று நடந்தது. இகு;கூட்டத்தில் 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில் கவுன்சிலர்கள் கூறியதாவது: சென்னையின் பல இடங்களில் குடிநீர் குழாய் உடைந்தாலும், கழிவுநீர் தேங்கினாலும், குடிநீர் வாரியத்தினர் கண்டுகொள்வதில்லை. கவுன்சிலர்களாகிய நாங்கள் தொடர்பு கொண்டாலும், அவர்கள் அலட்சியப்படுத்துகின்றனர் எனவே, மாதந்தோறும் மாநகராட்சி கவுன்சில் கூட்டம்போல், குடிநீர் வாரிய அதிகாரிகளுடனும் கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சியில், அனுமதியின்றி கேபிள் லைன் போடும் நிறுவனங்கள் மற்றும் வாடகை செலுத்தாத நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதற்கு பதிலளித்து மேயர் பிரியா கூறியதாவது: சென்னையில் ஆறு கேபிள் 'டிவி' சேவை நிறுவனங்கள் மற்றும் 17 இணைய கேபிள் சேவை நிறுவனங்கள் என, 23 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பல கேபிள் நிறுவனங்கள் உரிமம் இல்லாமல் இயங்கி வருகின்றன. வாடகை செலுத்தாத நிறுவனங்களுக்கு மாநகராட்சியில் இருந்து 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. சென்னையில் டெங்கு பாதிப்பு அதிகரிக்கும் நிலையில், கொசு ஒழிப்பு பணிகளில் கவுன்சிலர்கள் கவனம் செலுத்த வேண்டும். அடுத்த நான்கு மாதங்களுக்கு டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த பணியாற்றுவதோடு, தண்ணீர் தேங்கி உள்ளதை அப்புறப்படுத்த வேண்டும். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சென்னையில் பட்டா இல்லாத வீடுகளில் சொத்துவரி வசூலிப்பது குறித்து ஆய்வு செய்ய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இக்கமிட்டியினர் ஆய்வு செய்து பரிந்துரைகளை அளிக்க உள்ளனர். அதன்படி, மாநகராட்சி பகுதிகளில், அவர்களும் சொத்துவரி செலுத்த வழிவகை செய்யப்படும் இவ்வாறு அவர் கூறினார்.