துரைப்பாக்கம்: சோழிங்கநல்லூர் தொகுதி, அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் பேரமைப்பு சார்பில், துரைப்பாக்கத்தில் செயற்குழுக் கூட்டம் நடந்தது. இதில், 30க்கும் மேற்பட்ட சங்கங்களில் இருந்து நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்கள்:
பெருங்குடி கிடங்கில், புதிதாக குப்பை கொட்டுவதை தடை செய்ய வேண்டும். அடுக்குமாடி குடியிருப்பில் குப்பை சேகரிப்பில் உள்ள பாரபட்சத்தை களைய வேண்டும்.
மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடைபெறும் மழைநீர் வடிகால் மற்றும் கால்வாய் கட்டும் பணியை வேகப்படுத்த வேண்டும்.
சோழிங்கநல்லூர் தொகுதியில், பல இடங்களில் கம்பங்களில் உள்ள மின் கம்பிகளால் விபத்து அபாயம் ஏற்படுகிறது. மின்கம்பிகளை, கேபிள் வழியாக பூமிக்கடியில் பதிக்க வேண்டும்.
சோழிங்கநல்லூர் தொகுதியில், 7.5 லட்சம் மக்கள் தொகை உள்ளதால், இங்கு, அரசு பொது மருத்துவமனை அமைக்க வேண்டும். துரைப்பாக்கம் – கிழக்கு கடற்கரை சாலை திட்டத்திற்காக, அரசு மேல்நிலைப் பள்ளி இடிக்கப்பட்டது. மாற்று இடம் வழங்கவில்லை. இதனால், பள்ளி கட்டமைப்பை மேம்படுத்த முடியவில்லை. மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மின் உபயோக கட்டணத்தை, மாதம் ஒரு முறை கணக்கீடு செய்யும் வகையில், மின் வாரியம் நடவடிக்கை வேண்டும்.
சோழிங்கநல்லூர், பெருங்குடி மண்டலங்களில், குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டம் துரிதமாக நடைபெறவில்லை. இதனால், குடிநீர், கழிவு நீர் பிரச்னை அதிகமாக உள்ளது. பணியை வேகப்படுத்தக் கோரி, மார்ச் 12ம் தேதி, உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.