வேளச்சேரியில் உள்ள வீராங்கால் கால்வாயில் வடியும் மழைநீர், தெருக்களில் புகுவதை தடுக்க, 35 லட்சம் ரூபாய் செலவில் நிரந்தரமாக நீர் இறைக்கும் மோட்டார் அமைக்கப்பட உள்ள து. அடையாறு மண்டலம், 175, 176, 177 ஆகிய வார்டுகள், வேளச்சேரி பகுதியை உள்ளடக்கியது. ஒவ்வொரு பருவமழைக்கும், இந்த பகுதி பெரும் பாதிப்புக்கு உள்ளாகும். இதில், 176வது வார்டை ஒட்டி, 20 அடி அகலம், 15 அடி ஆழத்தில், வீரங்கால் கால்வாய் உள்ளது. ஆதம்பாக்கம், வேளச்சேரி ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர், இந்த கால்வாய் வழியாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அடைகிறது. வேளச்சேரி, ராம்நகர், விஜயநகர், குபேரன்நகர், சீனிவாசாநகர், முருகுநகர் உள்ளிட்ட பகுதியில், 50க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இங்கு வடியும் மழைநீர், கால்வாயை அடையும் வகையில், ஆங்காங்கே கால்வாயுடன் இணைத்து வடிகால்கட்டப்பட்டு உள்ளது. கால்வாயில் அதிகளவு மழைநீர் செல்லும் போது, வடிகால் வழியாக பின்னோக்கி பாய்ந்து தெருக்களில் தேங்குகிறது . மேலும், தெருக்களில் வடியும் மழைநீரும், கால்வாய்க்குள் செல்வது தடைப்பட்டது. இதனால், அப்பகுதிமக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகினர். இந்நிலையில், சீனிவாச நகரில் 75 எச்.பி., திறன் கொண்ட மோட்டார் வைக்க, மாநகராட்சி, 35 லட்சம் ரூபாய் ஒதுக்கியது. மோட்டார் மற்றும் அதற்கான அறை கட்டும் பணி, நேற்று துவங்கியது. இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: கால்வாயில் செல்லும் மழைநீர், வடிகால் வழியாக தெருக்களில் புகாத வகையில், வடிகாலில் மணல் மூட்டைகள் கொண்டு அடுக்கப்படும். கால்வாயில் மழைநீர் உயரும்போது, தெருக்களில் தேங்கும் மழைநீரை, மோட்டார் கொண்டு கால்வாயில் விடப்படும். இதன் வாயிலாக, 176வது வார்டில் ஏற்படும் வெள்ள பாதிப்பு குறையும் என்று அவர்கள் கூறினர்.