சென்னை: சென்னையில் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு, வார்டு வாரியாக உதவி பொறியாளர்களிடம், மாநகராட்சி தலைமை பொறியாளர் ராஜேந்திரன் ஆலோசனை நடத்தி வருகிறார். அதில், 2021ம் ஆண்டை விட, வரும் பருவ மழையில், 80 சதவீதம் வெள்ள பாதிப்பு குறையும் என, வார்டு பொறியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும், வடகிழக்கு பருவ மழை முன் தடுப்பு நடவடிக்கையையும் மாநகராட்சி துவக்கி இருப்பதுடன், தங்கள் பகுதியில் உள்ள மழை நீர் வடிகால் கட்டமைப்பை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்படுகிறது.
சென்னையில் தனி கவனம் செலுத்தி முதல்வர் ஸ்டாலின், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு, தலைமை செயலர் இறையன்பு, நகராட்சி நிர்வாகத்துறை கூடுதல் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, மாநகராட்சி மேயர் பிரியா, கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர், அடிக்கடி ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.
மழை நீர் தேக்கம், மழைநீர் வடிகால் மற்றும் கால்வாய் உள்ளிட்ட விபரங்கள் சென்னை மாநகராட்சியின்,https://chennaicorporation.gov.in/gcc/ என்ற இணையதளத்தில் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்.
சென்னையில் வடகிழக்கு பருவ மழை துவங்க ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், தற்போது அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள், 55 சதவீதம் வரை முடிந்துள்ளது.
அக்., மாதத்திற்குள் 90 சதவீதம் வரை பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. பணிகள் முழுமை பெறாவிட்டாலும், அங்கு மழைநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.