Saturday, November 23, 2024

வேளச்சேரி ஏரியில் கழிவுநீர் கலப்பு…

வேளச்சேரி ஏரி வரத்து கால்வாயை ஒட்டி கட்டடம் கட்டுவதை தடுப்பது, கழிவு நீர் கலப்பதை தடுத்தல் போன்ற -வற்றில், தலைமை செயலர் தலையிட்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், என, பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, வேளச்சேரி ஏரி வரத்து கால்வாய் பகுதிகளில், புதிதாக உயரமான கட்டடங்கள் கட்டப்படுவதால், ஏரிக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. வேளச்சேரி ஏரி மற்றும் வீராங்கல் ஓடையில் கழிவுநீர் விடுவதால் ஏரி மாசடைந்துள்ளது. அதன் அடிப்படையில், இரண்டு வழக்கு பதிவு செய்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு, வழக்கு விசாரணையில் ஏரியை பராமரிக்கும் பொதுப் பணித்துறை, ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டிய மாவட்ட கலெக்டர், கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டிய சென்னை குடிநீர் வாரியம் ஆகியவை மந்தமான அணுகுமுறையை கடைப்பிடிக்கிறது.

இதனால், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தி, வேளச்சேரி ஏரி மாசுபடுவதை தடுப்பதற்கான குறுகிய மற்றும் நீண்ட கால திட்டங்களை உருவாக்கி, அது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

மேலும், வேளச்சேரி ஏரிக்கு வரும் கழிவு நீரை லாரிகள் அல்லது புதை வடிகால் முறையில் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என, தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி கே.ராமகிருஷ்ணன், உறுப்பினர் கே.சத்யகோபால் முன் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: வேளச்சேரி ஏரி மாசுபடுவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை ஒருவரும் தாக்கல் செய்யவில்லை. எனவே, இந்த விவகாரத்தில் தலைமை செயலர் தலையிட்டு, வழக்கின் அடுத்த விசாரணை நாளான ஜன., 7ஆம் தேதிக்குள், இரண்டு வழக்குகள் தொடர்பாக, ஒருங்கிணைந்த விரிவான செயல் திட்டத்தை தலைமை செயலர் தாக்கல் செய்ய வேண்டும். என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Latest article