சிவா விஷ்ணு ஆலயத்தில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜைகள்…

0
97

பங்குனி உத்திரம் என்பது பௌர்ணமியும் உத்திரம் நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளாகும். மற்ற மாதங்களில் வரும் பௌர்ணமியைக் காட்டிலும் பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரமும் சந்திரனும் ஒரே நேர் கோட்டில் இணையும் போது தோன்றும் பௌர்ணமி நிலவு மிகப்பெரியதாகவும் மிகப்பிரகாசமாகவும் தோன்றும். மற்றொரு சிறப்பு என்னவென்றால், தமிழ் மாதங்களில் பனிரெண்டாவது மாதம் பங்குனி, அதே போல் நட்சத்திர வரிசையில் பனிரெண்டாவது நட்சத்திரம் உத்திரம்.

பங்குனி உத்திரத் திருவிழாவின் நாயகனான முருகப் பெருமான்-தெய்வானையை திருமணம் செய்து கொண்டதும் இந்த நன்னாளில் தான். அதோடு ஸ்ரீவள்ளிக்குறத்தி அவதரித்த நாளும் இந்த நாள் தான். எம்பெருமான் சொக்கநாதர்-அன்னை மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற்றதும் பங்குனி உத்திர நாளில் தான். இதனால் தான் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் உள்ள கோயில்களில் எல்லாம் பங்குனி உத்திர பிரம்மோற்சவம் என்ற பேரில் பத்து நாட்கள் திருவிழா, தேரோட்டம், தீர்த்தவாரி, சுவாமி-அம்பாள் திருக் கல்யாண உற்சவம் என சகலமும் நடைபெறுகிறது.

இதனைத் தொடர்ந்து நமது வேளச்சேரி விஜயநகர் சிவா விஷ்ணு ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு 18ஆம் தேதி வெள்ளிக் கிழமை அன்று ஸ்ரீகோதண்ட ராமர் சீதா பிராட்டியின் திருக்கல்யாணம் மகோத்உத்ஸவம் மாலை 2.45 மணி முதல் 4.30 மணி வரை மிகச்சிறப்பாக நடைபெற்றது.

ஸ்ரீ முருகன் வள்ளி தெய்வானை மற்றும் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீ முருகன் வள்ளி தெய்வானைக்கு திருக்கல்யாணமும் நடைபெற்றது. ஆன்மீக பக்தி கொண்ட பக்தர்கள் திரளாக கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.