நமது வேளச்சேரி சிவா விஷ்ணு ஆலயத்தில் 1-7-2023ம் தேதி சனிக்கிழமை அன்று காலை 09.30 மணிக்கு ஜேஷ்டாபிஷேகம் 81கலச திருமஞ்சனம் நடைபெற்றது.
ஆனி மாத கேட்டை நட்சத்திரம் அற்புதமானது. அன்று ஜேஷ்டா அபிஷேகம் செய்து வழிபடுவார்கள். கேட்டை நட்சத்திரத்திற்கு ஜேஷ்டா நட்சத்திரம் என்று பெயர். இந்த நட்சத்திரத்திற்கு உரிய தேவதை இந்திரன் என்கிறது வேத ஜோதிடம். ஆனி கேட்டையில் ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு செய்யப்படும் அபிஷேகத்தை தரிசனம் செய்தால் இந்திரனைப் போல வாழ்வு அமையும் தலைமைப் பதவி தேடி வரும் என்பது நம்பிக்கை.
சூரியன் மிதுன ராசியில் சஞ்சரிக்கும் காலம் மிதுன மாதம். ஆனி மாதம் வடமொழியில் ஜேஷ்ட மாதம் என்று பெயர். ஜேஷ்டா என்றால் மூத்த அல்லது பெரிய என்று பொருள். ஆனி மாதத்தில் மிக நீண்ட பகல் பொழுது இருக்கும். இது பெரிய மாதமும் கூட. இந்த மாதத்தில்தான் ஆனி திருமஞ்சனம் உள்ளிட்ட பல முக்கிய விழாக்கள் நடைபெறுகின்றன.