Monday, December 23, 2024

வேளச்சேரி விரைவு சாலையில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்…

வேளச்சேரி விரைவு சாலையில், சாலை அகலம் குறைவான பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, நடைபாதை அமைக்கப்படுகிறது. மீண்டும், ஆக்கிரமிக்க முயன்றால், கைது நடவடிக்கை பாயும் என, அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தள்ளனர்.

வேளச்சேரி பகுதியில், ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் உள்ளன. சென்னை மாநகரின் முக்கிய பகுதியாக வேளச்சேரி உருவெடுத்துள்ளது. வேளச்சேரி விரைவு சாலை, 2 கி.மீ., நீளம், 150 அடி அகலம் கொண்டது. இந்த சாலையின் ஒரு பகுதியில், வேளச்சேரி ஏரி உபரி நீர் செல்லும், 15 அடி அகல கால்வாய் உள்ளது. இந்த கால்வாயை, மூடுகால்வாயாக மாற்றி, சாலை அகலப்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால், வேளச்சேரி ஏரி பகுதியில், 200 அடி நீளத்தில் சாலையின் அகலம் 80 அடியாக உள்ளது. அருகில் ‘சிக்னல்’ உள்ளதால், 150 அடி அகல சாலையில் இருந்து வேகமாக செல்லும் வாகனங்கள், சிக்னலில் வரிசை கட்டி நிற்பதால், போக்குவரத்து நெரிசல் அதிகரித்து, அடிக்கடி விபத்தும் ஏற்பட்டது. இதற்கு காரணம், 200 அடி நீள சாலையில், கடைகள், வாகனங்கள் நிறுத்தம் என, ஆக்கிரமித்தது போக, 60 அடி அகலமாக இருந்தது.

கடந்த 2014 மற்றும் 2018ம் ஆண்டுகளில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அதுவும், ஓரிரு வாரங்கள் தான் நீடித்தது. மீண்டும், அதே இடத்தில் ஆக்கிரமிப்புகள் முளைத்தன. இந்நிலையில், சில நாட்களுக்கு முன், வேளச்சேரியில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின், அப்பகுதியில் உள்ள சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற, நெடுஞ்சாலை துறைக்கு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து, போலீசார் உதவியுடன், 200 அடி நீள சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தவர்கள் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அதிரடி நடவடிக்கை இந்நிலையில், ஆக்கிரமிப்பு அகற்றிய இடத்தில், 200 அடி நீளம், 8 அடி அகலத்தில் நடைபாதை அமைக்கப்படுகிறது. நடைபாதை மற்றும் அதை ஒட்டிய சாலை பகுதியை, மீண்டும் ஆக்கிரமித்தால், கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, போக்குவரத்து போலீசார் பரிந்துரையில், காவல் உயர் அதிகாரிகள், வேளச்சேரி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

நடைபாதை பணி முடிந்தால், சாலையின் அகலம் அதிகரிக்கும். வாகன ஓட்டிகள், பாதசாரிகளும் இடையூறு இல்லாமல் செல்ல முடியும். இந்த அதிரடி நடவடிக்கையால், வேளச்சேரி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். அதே வேளையில், விரைவு சாலையில் உள்ள இதர ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

Latest article