வேளச்சேரி வாசுதேவ பெருமாள் கோவில் ஆக்கிரமிப்பு…

0
142

ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள வேளச்சேரி வாசுதேவ பெருமாள் கோவில் இடத்தை, ஹிந்து சமய அறநிலையத்துறை மீட்டு எடுக்க வேண்டும் என மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

அடையாறு மண்டலம், 178வது வார்டு வேளச்சேரியில் வாசுதேவ பெருமாள் கோவில் உள்ளது. தொல்லியல் துறை ஆராய்ச்சியில், பதினாறாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில் என்று தெரிய வந்துள்ளது. முன்பு, இக்கோவில் பத்தாயிரம் சதுர அடி பரப்புக்கு மேல் இருந்துள்ளது தற்போது 2,000 சதுர அடி பரப்பில் உள்ளது. இதில், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரச மரம் உள்ளது. அரசியல் கட்சியைச் சேர்ந்த சிலர், 20 ஆண்டுகளுக்கு முன்னர் மரத்தை முறித்து, சிலையை வெளியே வீசி, கட்டடத்தை இடித்து ஆக்கிரமிக்க முயன்றபோது, அங்குள்ள பெருமாள் பக்தர்கள் எதிர்த்தனர். இதனை தொடர்ந்து, அவர்கள் ஒன்று சேர்ந்து, வாசுதேவ பெருமாள் என்ற அறக்கட்டளையை துவக்கி, கோவிலை ஆக்கிரமிக்காத வகையில் பாதுகாத்து வருகின்றனர். கோவிலில் உள்ள பெருமாள் சிலைக்கு பூஜை நடத்துகின்றனர். இந்த கோவிலை, ஹிந்து சமய அறநிலையத்துறை வசம் ஒப்படைக்க முயன்றபோது, அரசியல் கட்சிகள் சேர்ந்து தடுத்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த மாதம் அமைச்சர் சேகர் பாபு, வாசுதேவ பெருமாள் கோவில் இடத்தை நேரில் ஆய்வு செய்தார். அப்போது சுற்றி புதராகக் கிடந்த கோவில் இடத்தை மாநகராட்சி சுத்தம் செய்தது. கோவில் இடத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

இந்நிலையில், கோவில் பின்பகுதியில் கூடாரம் அமைத்து, வயதான நபரை தங்க வைத்துள்ளனர். பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருப்பதாகக் கூறி, கோவில் இடத்தை ஆக்கிரமிக்க மீண்டும் முயற்சி நடக்கிறது. இதனை அமைச்சர் தலையிட்டு கோவில் இடத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்து வாசு தேவ பெருமாள் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் கூறியதாவது : அமைச்சர் ஆய்வு செய்து, ஹிந்து சமய அறநிலையத்துறை வசம் சேர்க்கப்படும் என கூறினார். அதன் பின், இடத்தை ஆக்கிரமிக்க சில கட்சியினர் தீவிரமாக இறங்கினார்கள். ஆக்கிரமிப்பு தொடர்பாக அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றோம். நடவடிக்கை தான் இல்லை. கோவிலை மீட்டு, ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள தண்டீஸ்வரம் கோவில் வசம் ஒப்படைக்க, அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் அனைவரும் கோரிக்கை விடுத்தனர்.