Monday, December 23, 2024

வேளச்சேரி துணை மின் நிலையத்தில் வெள்ளம்…

ஒவ்வொரு பருவ மழையின் போதும் வேளச்சேரி துணை மின் நிலையத்தில், மின் பகிர்மான இயந்திரங்கள் மூழ்கும் அளவுக்கு மழை நீர் தேங்குவதால், நிரந்தர தீர்வு காண முடியாமல் அதிகாரிகள் திணறுகின்றனர்.

வேளச்சேரி துணை மின் நிலையம், 110 கே.வி., திறன் கொண்டது. இங்கிருந்து, வேளச்சேரி முழுவதும், ஒரு லட்சத்திற்கு மேல் மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதுபோக, ஆலந்தூர், மடிப்பாக்கம், நங்கநல்லூர் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு, தலா 33 கே.வி., திறன் கொண்ட மின் வினியோகம் செல்கிறது. கடந்த 1970ல் 70 சென்ட் பரப்பளவு இடத்தில், 33 கே.வி., திறன் கொண்ட வேளச்சேரி துணை மின் நிலையம் துவங்கப்பட்டது.

மக்கள் தொகைக்கு ஏற்ப 1990ஆம் ஆண்டு, 110 கே.வி., திறன் கொண்ட துணை மின் நிலையமாக தரம் உயர்த்தப்பட்டது. கடந்த 2000ல் மின் நுகர்வு அதிகரித்ததுடன், இதர துணை மின் நிலையங்களுக்கு மின்சாரம் வழங்கும் துணை மின் நிலையமாக மாறியது. இந்த துணை மின் நிலையம், வேளச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ளது. இந்த சாலையை விட, 6 அடி பள்ளத்தில் துணை மின் நிலையம் அமைந்துள்ளது.

இதனால் ஒவ்வொரு மழைக்கும், துணை மின் நிலையத்தில் மழை நீர் தேங்கும். மழை நின்று ஒரு வாரம் வரை நீரூற்று இருப்பதால், மோட்டார் கொண்டு நீர் இறைக்கப்படுகிறது. அதுவும் வடிகால் இல்லாத, வேளச்சேரி பிரதான சாலையில் நீரை இறைத்து விடுவதால், சாலையில் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். சாலையும் சேதமடைகிறது. வேளச்சேரி பிரதான சாலையில், வடிகால் கட்டினால் சாலையில் நீரை இறைத்து விடுவது தடுக்கப்படும். இதற்கு, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே வேளையில், மழை நீர் தேங்கினால் மின் பகிர்மான இயந்திரங்களை பாதுகாப்பதில் அதிகாரிகளுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன.

இதற்கு தீர்வு காண, மின் பகிர்மான இயந்திரங்களை, 8 அடி உயரத்தில் அமைக்க வேண்டும் மற்றும் சீரான மின் வினியோகம் வழங்குவதில் சிக்கல் ஏற்படும் சூழல் உள்ளதால், மழை நீர் தேக்கத்திற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். என தற்காலிக நடவடிக்கையாக, பெரிய அளவில் மழை நீர் சேகரிப்பு தொட்டி கட்டி, அதில் சேரும் நீரை இறைக்க முடியுமா என, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

Latest article