வேளச்சேரி – தரமணி சாலையில் பத்து கோடியில் கட்டப்படும் வடிகால் பணி…

0
116

வேளச்சேரி, தரமணி பகுதியில் வடியும் மழைநீரை, மூடுகால்வாயில் சேர்க்கும் வகையில், 10 கோடி ரூபாயில் வடிகால் மற்றும் இணைப்பு வடிகால் கட்டப்படுகிறது. வேளச்சேரி – தரமணி 100 அடி சாலை, 3.5 கி.மீ., நீளம் கொண்டது. இதில், சாலை மையப்பகுதியில், 15 அடி அகலத்தில் மூடுகால்வாய் உள்ளது. இந்த பகுதியில் வடியும் மழைநீர், பக்கவாட்டு வடிகால் வழியாக, மூடுகால்வாயில் விழும். இந்த மூடு கால்வாய், பகிங்ஹாம் கால்வாயுடன் இணைக்கப்பட்டது.

இந்த சாலையில், 3.5 கி.மீ., தூரத்தில், 1,600 மீட்டர் தூரம் வடிகால் வசதி இல்லை. பருவ மழையின் போது, வேளச்சேரி, தரமணி பகுதியில் வடியும் மழைநீர், தெருக்கள், பிரதான சாலை மற்றும் அணுகு சாலையில் தேங்கியது. மழைநீர், மூடுகால்வாயில் விழும் வகையில், 1,600 மீட்டர் தூரம் வடிகால் மற்றும் வடிகாலில் இருந்து மூடுகால்வாயை இணைக்க, எட்டு இடங்களில் இணைப்பு வடிகால் அமைக்கப்படுகிறது. இந்த பணி, பத்து கோடி ரூபாயில் நடக்கிறது.

பருவமழையால், நவம்பர் மாதம் பணி நிறுத்தப்பட்டது. தற்போது, அந்த பணிகள் மீண்டும் வேகமெடுத்துள்ளது. மூன்று மாதத்தில், அனைத்து பணிகளையும் முடிக்க, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.