வேளச்சேரி ஏரியில் புதிய ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் தடுத்தனர்…

0
164

சென்னை வேளச்சேரியில் புதிதாக முளைக்கும் ஆக்கிரமிப்புகளை தடுக்க, பொதுப்பணித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நீர்நிலை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னையின் முக்கிய ஏரிகளின் ஒன்றாக வேளச்சேரி ஏரி உள்ளது. இந்த ஏரி, 265.48 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அரசு கையகப்படுத்தியது போக, 55 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. தற்போது, கரையில் 2,000க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் உள்ளன. இந்த ஏரி, பொதுப்பணித் துறை பாதுகாப்பில் உள்ளது. எனினும், ஆகாயத் தாமரை அகற்றும் பணியை, மாநகராட்சி செய்கிறது. இந்த ஏரியில், ஐந்து இடங்களில் இருந்து கழிவு நீர் கலக்கிறது. இதை தடுக்க, குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை. பத்து ஆண்டுகளுக்கு முன், ஏரி வழியாக வேளச்சேரி விரைவு சாலை அமைக்கப்பட்டது. இதனால், 80 சதவீத பரப்பளவு ஏரி, சாலையின் மேற்கு திசையிலும், 20 சதவீத பரப்பளவு ஏரி, கிழக்கு திசையிலும் உள்ளது. இந்த பகுதி, ஆக்கிரமிப்பால் குட்டையாக மாறி வருகிறது.

இந்த மாதம் பெய்த பருவமழை மீட்பு நடவடிக்கை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில், மாநகராட்சி, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கவனம் செலுத்தி உள்ளனர். அதிகாரிகள், வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் இருப்பதை தெரிந்து கொண்டு, ஆக்கிரமிப்பாளர்கள், நீர்நிலை ஆக்கிரமிப்பில் இறங்கி உள்ளனர். இது தொடர்பாக, மாநகராட்சி அதிகாரிகள், பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் தெரிவித்து உள்ளனர். வேளச்சேரி ஏரியில் புதிதாக முளைக்கும் ஆக்கிரமிப்புகளை கண்காணிக்க முடியவில்லை. மாநகராட்சி வசம் ஒப்படைத்தால் தான், ஏரியை முழுமையாக பாதுகாக்க முடியும். போதுப் பணித் துறை அதிகாரிகள் ஏரி ஆகாயத் தாமரையை அகற்றுவதால், புதிதாக முளைக்கும் ஆக்கிரமிப்புகள் தெரிந்து விடும். உடனே, பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கிறோம். நாங்களும், முடிந்த அளவு தடுக்க முயற்சி செய்கிறோம் என அதிகாரிகள் கூறினர்.