Monday, December 23, 2024

வேளச்சேரி ஏரியில் கூழைக்கடா பறவைகள்…

கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், வேளச்சேரி ஏரிக்கு கூழைக்கடா பறவைகள் வரத்து அதிகரித்துள்ளதால், பறவை ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இவ்வகை பறவைகள் வேளச்சேரி ஏரிக்கு வருவது இதுவே முதல் முறை என்பது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது.

வேளச்சேரி ஏரியில் பல்வேறு ஆக்கிரமிப்புகள் முளைத்தாலும், 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்த ஏரியில் இதுவரை நீர் வற்றியதில்லை. கோடை காலங்களில் வெயில் எவ்வளவு சுட்டெரித்தாலும், இந்த ஏரியில், குறைந்தது 10 அடிக்காவது தண்ணீர் தேங்கி நிற்கும். இந்த ஏரியில், மீன்கள், ஆமைகள் அதிகம் உள்ளன. இதுவரை, காக்கை, கொக்கு போன்ற பறவைகள் மட்டுமே இரை தேடி முகாமிட்ட நிலையில், முதல் முறையாக, 28ஆம் தேதி வியாழன்கிழமை அன்று 150க்கும் மேற்பட்ட “பெலிகன்” என்று அழைக்கப்படும் கூழைக்கடா பறவைகள் வேளச்சேரி ஏரியில் முகாமிட்டன. பொதுவாக இவ்வகை பறவைகள் பள்ளிக்கரணை, பெரும்பாக்கம், சோழிங்கநல்லூர் சதுப்பு நில பகுதிகள் மற்றும் அடையாறு ஆறு முகத்துவார பகுதியில் மட்டுமே காணப்படும்.

இந்நிலையில் 28ஆம் தேதி வியாழன்கிழமை அன்று முதல் முறையாக, வேளச்சேரி ஏரிக்கு வந்ததை, அங்குள்ள மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இது, பறவை ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேளச்சேரி பகுதிக்கு முதல் முறையாக கூழைக்கடா பறவைகள் வந்ததற்கான காரணம் குறித்து, பறவையியல் ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இங்கு, நீர் வற்றாமல் உள்ளதால், வரும் நாட்களில் பறவைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest article