Monday, December 23, 2024

வேளச்சேரி உபரி நீர் கால்வாய் மூழ்கியது மக்கள் அவதி…

சென்னை வேளச்சேரி உபரி நீர் கால்வாய் மூழ்கியதால், ராம் நகர், விஜய நகர் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். சென்னையில் பெய்த கன மழையால், பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, வேளச்சேரி பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வேளச்சேரியில் இருந்து வெளியேறும் உபரி நீர், 15 அடி அகல கால்வாய் வழியாக, சதுப்பு நிலத்தை அடைகிறது. ஆலந்தூர், ஆதம்பாக்கம், மடுவாங் கரையில் வடியும் மழை நீர், ஏரியை அடைந்து, அங்கிருந்து கால்வாய் வழியாக செல்கிறது. வழக்கத்தை விட, அதிகமான வெள்ளம், கால்வாயை மூழ்கடித்து சென்றது.

ராம் நகர், விஜய நகரில் வடியும் மழை நீர், கால்வாயில் சேரும் வகையில், வடிகால் கட்டமைப்பு உள்ளது. கால்வாய் மூழ்கி சென்றதால், வடிகாலில் நீரோட்டம் இல்லாமல் அப்படியே நின்றது. இதனால், ராம் நகர், விஜய நகர், ஏ.ஜி.எஸ்., காலனி உள்ளிட்ட பகுதிகளில், 20 க்கும் மேற்பட்ட தெருக்களில் மழைநீர் தேங்கியது.

அங்குள்ள மக்கள், அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியே வர முடியாமல் வீட்டிலே முடங்கினர். கல்கி நகரில் மோட்டார் வைத்ததால் அங்கு பாதிப்பு குறைவாக இருந்தது.

வேளச்சேரி – தரமணி சாலையில் அமைத்துள்ள மூடு கால்வாயில் செல்ல வேண்டிய வெள்ளம், பின்னோக்கி பாய்வதும், ராம் நகர், விஜய நகர் பாதிப்புக்கு ஒரு காரணம். வேளச்சேரி பகுதியில், நீரோட்டம் பார்த்து வடிகால் கால்வாய் கட்டியிருந்தால், பாதிப்பு குறைந்திருக்கும். இதற்கு, மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை, வருவாய்த் துறைகள் இணைந்து செயல்படுவது அவசியம் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Latest article