வேளச்சேரியில் வெள்ளம்… வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் தவிப்பு…

0
303

சென்னையில் பருவமழை காரணமாக பல இடங்கள் வெள்ளக் காடாக மாறியுள்ளது. அதிலும் குறிப்பாக சென்னை தண்ணீரில் தத்தளித்து வருகிறது. ஓயாமல் பெய்து வரும் கனமழையால் மக்கள் பல இன்னல்களை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல சுரங்கப்பாதைகள் முற்றிலுமாக மழை வெள்ளத்தினால் மூழ்கிவிட்டன. பல வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை மோசமடைந்து வருகிறது.

தொடர் கனமழையால், வழக்கம் போல் இம்முறையும் வேளச்சேரி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தெருக்களில் தேங்கிய மழைநீருடன் கழிவு நீரும் கலந்து, குடியிருப்புகளுக்குள் புகுந்ததால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

சென்னையில் ஒவ்வொரு முறை கனமழை பெய்யும் போதும், வேளச்சேரி பகுதி கடுமையாக பாதிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால், அடையாறு மண்டலம், 178வது வார்டு, விஜயநகர், ராம்நகர், கல்கி நகர், ஏ.ஜி.எஸ். காலனி உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, வேளச்சேரி ராம்நகர், விஜயநகர் பகுதிமக்கள் வெளியே சென்று, அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாத சூழல் நிலவுகிறது. குடியிருப்பு பகுதிகளில், மழை நீருடன் கழிவு நீரும் தேங்கியதுடன், தாழ்வான பகுதிகளில், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.

அதே போல், 177வது வார்டு, நேரு நகர், பெரியார் நகர், அம்பேத்கர் நகர், எம்.ஜி.ஆர்., நகர், அஷ்டலட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. எம்.ஜி.ஆர்., நகர் 10வது தெருவில் கழிவுநீர் வெளியேறி, மழைநீருடன் கலந்து வீடுகளை சுற்றி தேங்கியதால், சுகாதார பாதிப்பு ஏற்பட்டது. மேலும், 179வது வார்டு, டான்சி நகர், அன்னை இந்திரா நகர், தண்டீஸ்வரம் நகர், காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்பட்டன. முந்தைய ஆண்டுகளில் பெய்த மழையில், தண்டீஸ்வரம் நகரில் மழைநீர் தேங்காது. ஐ.ஐ.டி.,யில் இருந்து வெளியேறிய மழைநீர், தண்டீஸ்வரம் நகரில் புகுந்ததால், அங்குள்ள தெருவாசிகள் எதிர் பார்க்காத சிரமத்திற்கு ஆளாகினர்.

பெரும்பாலான பகுதிகளில் இடுப்பளவிற்கு மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காணப்படுகிறது. மக்கள், வெளியே வர முடியாமல் வீட்டுக்குள் முடங்கி உள்ளனர். அவசர தேவைக்கு வாகனங்களை வெளியே எடுக்க முடியாத நிலை நீடிக்கிறது.