Sunday, November 24, 2024

வேண்டும் வரம் அருளும் உறையூர் வெக்காளியம்மன்

கோபம் கொண்டு மதுரையை எரித்த கண்ணகியின் சாபம் தீர்க்க நெடுங்கிள்ளியின் மகனான பெருநற்கிள்ளி எடுப்பித்த பத்தினிக் கோட்டமே,இப்போது வெக்காளி கோவிலாக உள்ளது என்றும் கூறப்படுகிறது.
இதனால் வெக்காளி கண்ணகியே என்றும் கூறப்படுகிறது.
சோழர்களின் குல தெய்வமாகவும் போர்க் கடவுளாகவும் விளங்கியவள் வெக்காளி எனும் கொற்றவை. இவள் வெற்றியை அருளும் வீரதேவியாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் நீதியரசியாக, குறைகளைத் தீர்க்கும் குலதேவியாக,  தீமைகளை    அழிக்கும் ஸ்ரீதூகையாக,   பக்தர்களின்    தாயாக விளங்குபவள்  வெக்காளி.
உறையூர், வாகபுரி, உறந்தை, வேதபுரம், வரணம், முக்கீசபுரம், தேவிபுரம், உரகபுரம் என்றெல்லாம் வழங்கப்படும் உறையூர் இன்று திருச்சி மாநகரின் அங்கமாக உள்ளது.
முன்பு முற்கால சோழர்களின் தலைநகரமாக மாட மாளிகைகளும் கூட கோபுரங்களும் நிறைந்த விண்ணகரமாக விளங்கியது என்று வரலாறு சொல்கிறது.
உறையூரின் வடக்கே காவல் தெய்வமாக இந்த வெக்காளி வெட்ட வெளியில் வானமே கூரையாக,மேகங்களே திருவாசியாக,மழையே அபிஷேகமாக,நட்சத்திரங்களே மலர்களாகக் கொண்டு எழுந்தருளி இருக்கிறாள்.
சாரமா முனிவர் உறையூரில் செவ்வந்தி தோட்டத்தை பராமரித்து வரும் காலத்தில்,அந்த மலர்களை அரசனுக்காக எடுத்து சென்று விட்டான் பிராந்தகன் எனும் வணிகன்.
முனிவர், மன்னவன் பராந்தகனிடம் முறையிட அவன் கண்டு கொள்ளவே இல்லை.இதனால் கோபமான சாரமா முனிவர் தாயுமான சுவாமியிடம் முறையிட்டார்.
ஈசன் கோபமாகி மேற்கு நோக்கித் திரும்பி உறையூரையும் அங்கிருந்த மன்னன் அரண்மனையும் மண் மழை பொழிய வைத்து அழித்தார்.
இதனால் வீடிழந்த மக்கள்,சோழர்களின் காவல் தேவியான கொற்றவையை சரண் அடைய, அவள் இந்த ஊர் மக்களின் காவலுக்காக இங்கே வெட்ட வெளியில் எழுந்தருளி மக்களைக் காத்தாளாம்.அன்று அவள் அமர்ந்த இடத்திலேயே இன்னும் அருள்பாலித்துக் கொண்டு,மேலே விமானமோ விதானமோ இல்லாமல் இருந்து வருகிறாள் என்கிறது கோவில் புராணம்.
இதனால் தேவி வீர தேவியாக ஆசனத்தில் தீ சுவாலையுடன்,நாகமும் கொண்ட கிரீடமும்,சிவந்த அதரங்களும் கொண்டு விளங்குகிறாள்.
உடுக்கை, பாசம்,சூலம் ஏந்தி அசுரனை மிதித்த கோலத்தில் காட்சி தருகிறாள்.
உழைக்கும் மக்களின் உற்ற துணையாக இந்த வெக்காளி விளங்குகிறாள்.அதனால் ஏழை எளிய மக்களின் கூட்டமே இந்த ஆலயத்தில் நிரம்பி வழிந்து கொண்டிருக்கும்.
குறைகளைத்   தீர்த்துக்   கொள்ளவோ,ஏதேனும் வேண்டியோ இங்கு வரும் பக்தர்கள், தங்களின் கோரிக்கைகளை ஒரு துண்டு சீட்டில் எழுதி விண்ணப்பித்து வெக்காளியின் திருப்பாதங்களில் வைத்து வணங்கி,பிறகு அதை அங்குள்ள சூலத்தில் கட்டி வைப்பார்கள்.அப்படி கட்டிய நாளில் இருந்து 40 நாள்களுக்குள் அன்னை அந்த வேண்டுதலை நிறைவேற்றி வைப்பாள் என்பது அவர்களின் நம்பிக்கை.அது பெரும்பாலும் நடைபெறுகிறது என்பதும் உண்மை.
இங்கு ஸ்ரீவல்லப கணபதி,விசாலாட்சி சமேத விஸ்வநாதர்,வள்ளி-தெய்வானை சமேத மயூர கந்தன்,காத்தவராயன்,புலி வாகன பெரியண்ணன், மதுரை வீரன், ஸ்ரீதுர்க்கை,
பொங்கு சனீஸ்வரர் என பல சந்நிதிகள் உள்ளன.வெக்காளி அம்மனுக்கு ஆண்டு தோறும் அநேக    திருவிழாக்கள்    நடைபெற்று வருகின்றன.     இநு;த  ஆலயத்தில் கொண்டாட்டத்துக்கு  குறைவே  இல்லை எனலாம். ஆடியின் ஒவ்வொரு நாளுமே இங்கு சிறப்பு என்றே சொல்லலாம்.பெருமைகள் பல கொண்ட,அம்பிகைக்கே உரித்தான இந்த ஆடியில் வாய்ப்பு இருப்பவர்கள் உறையூர் சென்று வெக்காளியின் அருள் பெற்று மகிழலாம். வெக்காளியின் திருக்கோவிலை மிதித்தவர்களுக்கு வேதனை எதுவுமே அண்டாது என்பார்கள். தோஷங்கள் விலகும் தலம்,பாவங்கள் அகலும் தலம், புண்ணியங்கள் சேரும் தலம்,வெக்காளியின் திருத்தலம். அன்னையின் திருவருளால் நாடும் வீடும் சகலமும் நலம் பெற்று வாழட்டும் என்று வேண்டிக் கொள்வோம்.

அமைவிடம்
திருச்சி மாநகரின் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து 3 கி.மீ தூரத்தில் உறையூர் உள்ளது.

Latest article