விநாயகர் சதுர்த்தி, விநாயகரின் முக்கியமான விழாவாகும். ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விரதத்தை ஒரு கொண்டாட்டமாகவே நாம் பாவிக்கலாம். விநாயகர் மிகவும் எளிமையான கடவுள். யார் கூப்பிட்டாலும் ஓடோடி வந்து அருள் தருவார். அதனால்தான் அவர் எல்லாருக்கும் பொதுவாகவும், யாரும் சுலபமாக வழிபடும் வகையிலும் இருக்கிறார்.
விநாயக சதுர்த்தி பல இடங்களில் கோலாகலமாக கொண்டாடப்படும். விநாயக சதுர்த்தி நாளில் விநாயகரை நம் வீட்டில் எத்திசையில் வைக்க வேண்டும்.
இடப்பக்கம் :
விநாயகரின் தும்பிக்கை எப்போதுமே இடது பக்கமாக தன் தாயான கௌரியை பார்த்த வ ண்ணம் விநாயகரை வைக்க வேண்டும். இந்நாளில் விநாயகருடன் சேர்த்து கௌரியையும் பலரும் வைப்பார்கள். விநாயகரின் தும்பிக்கை கௌரி தேவியை நோக்கி இடது பக்கமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
பின் புறம் :
விநாயகரின் சிலையை பின்புறம் வீட்டில் உள்ள எந்த ஒரு அறையையும் பார்த்தவாறு இருக்க கூடாது. விநாயகர், வளமையை தரும் கடவுளாகும். அவரின் பின்புறம் வறுமையை குறிக்கும். அதனால் தான் அவரின் பின்புறம் வீட்டிற்கு வெளிப்பக்கம் பார்த்தவாறு இருக்க வேண்டும்.
தென் திசை :
தென்புற திசையில் விநாயகர் சிலையை வைக்க கூடாது. வீட்டின் கிழக்கு அல்லது மேற்கு திசைகளில் தான் விநாயகர் சிலையை வைக்க வேண்டும். உங்கள் வீட்டின் பூஜை அறையும் கூட தெற்கு திசையில் இருக்க கூடாது.
கழிவறை :
கழிவறையுடன் இணைக்கப்பட்டுள்ள சுவற்றை நோக்கியும் விநாயகர் சிலையை வைக்க கூடாது.
உலோகம் :
விநாயகர் சிலை உலோகத்தில் செய்திருந்தால், வட கிழக்கு அல்லது தென் மேற்கு திசையில் வைக்க வேண்டும்.
மாடிப்படி :
மாடிப்படி இருக்கும் வீட்டில், கண்டிப்பாக மாடிப்படிக்கு அடியில் விநாயகர் சிலையை வைக்கக்கூடாது. இது உங்கள் வீட்டிற்கு துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.விநாயகர் சதுர்த்தி வழிபாடு செய்ய நல்ல நேரம்.
ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி திதியை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம். ஆன்றைய தினம் விநாயகப்பெருமானை முழுமனதோடு பூஜித்து விரதமிருந்து, அருகில் உள்ள ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு வந்தால், நமக்கு அனைத்துவிதமான நன்மைகளும் கிடைக்கும் என்பது உறுதி.
சதுர்த்தியன்று பூஜை செய்யும் முறை
விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையிலேயே எழுந்து அதிகாலையிலேயே எழுந்து வீட்டைத் தூய்மை செய்து மாக்கோலமிட வேண்டும். பின் நீராடி வந்து பூஜை அறையில் மணைப்பலகையை வைத்து, அதன்மேல் தலை வாழையிலையை, அதன் நுனி வடக்குப் புறமாக இருக்கும்படி வைத்து அதில் அரிசியைப் பரப்ப வேண்டும். அரிசியின் மேல் நம் வலதுகை மோதிர விரலால் பிள்ளையார் சுழியிட்டு, அதன்கீழ் ஓம் என எழுத வேண்டும்.
மணையின் இருபுறமும் குத்துவிளக்கை வைத்து, தேவையான பூஜைப் பொருட்கள், நிவேதனப் பொருட்கள், அபிஷேகப் பொருட்களை தயாராக வைக்க வேண்டும்.
நம் வீட்டுப் பிள்ளைகள் மூலமாக, களிமண்ணால் செய்யப்பட்ட வலஞ்சுழி விநாயகரை வாங்கி வரச் செய்து, அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு, தொப்பையில் காசு வைக்க வேண்டும். பிள்ளையாருக்கு அரையில் துண்டு கட்டி பூமாலை, அறுகம்புல் மாலை அணிவித்து, மணைப் பலகையில் இருத்த வேண்டும். குன்றிமணியால் கண்களைத் திறக்க வேண்டும். பின்னர் பிள்ளையார் குடை வைத்து, விளக்குகளை ஏற்றி பூஜையைத் தொடங்க வேண்டும். கோழுக்கட்டை, சுண்டல், வடை முதலிய நிவேதனப் பட்சணங்கள், அர்ச்சனை மலர்கள், பத்ரங்கள் 21 எனும் எண்ணிக்கையில் இருப்பது சிறப்பு. இல்லாவிட்டாலும் நம்மால் முடிந்ததைக்கொண்டு பூஜை செய்யலாம். தூபதீபம் காட்டி அர்ச்சனை செய்யவேண்டும். பின்னர்,
ஓம் ஸ்ரீம், ஹ்ரீம், க்லீம், க்ளௌம் கம், கணபதயே
வர வரத ஸர்வ ஜனம்மே வஸமாயை ஸ்வாஹா
எனும் கணபதியின் மூல மந்திரத்தை 21 முறை அல்லது 51 முறை சொல்லி பூஜையை முடிக்க வேண்டும். பூஜை முடிந்ததும் குழந்தைகளுக்கு நிவேதனப் பட்சணங்களை வழங்கி நாமும் சாப்பிடலாம். வீட்டில் பூஜை முடித்தபின் ஆலயம் சென்று விநாயகரை வணங்கி வரலாம். காலை-மாலை இருவேளையும் பூஜை செய்வது சிறப்பு. விநாயகர் சதுர்த்திக்குப் பின் விநாயகர் சிலையை விவர்ஜனம் செய்யவேண்டும். விநாயகர் சதுர்த்தியையும் சேர்த்து, அன்றைய தினமோ அல்லது ஒன்றைப் படையில் அமையும்படியாக 3,5,7-ஆவது நாட்களிலோ இதை மேற்கொள்ளலாம்.
ஆண்கள் மட்டுமே பிள்ளையாரை நீரில் கரைக்க வேண்டும். விநாயகர் வீட்டில் இருக்கும்வரை அவருக்கு இருவேளை பூஜை நைவேத்தியம் செய்ய வேண்டும். பிள்ளையார் சிலை சேதமடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
தொப்பையில் பதித்த காசை எடுத்து வீட்டில் வைத்து பூஜை செய்தால் செல்வம் பெருகும்ளூ லட்சுமி கடாட்சம் கிட்டும் பிரணவமே வேதத்தின் மூலம். ஓம் என்ற ஒலியின் வடிவமே விநாயகர். எனவே பிரணவப் பொருள் என்று விநாயகரை அழைக்கிறோம். ஈஸ்வரனின் மகனான விநாயகர் பூதகணங்களின் தலைவரும் ஆவார். அதனால் அவருக்கு கணபதி என்ற பெயரும் உண்டு. தேவர்களுக்கு துன்பம் கொடுத்த கஜமுகன் என்ற அரக்கனை அழிப்பதற்காக சிவபெருமான் அருளால் விநாயகப் பெருமான் அவதரித்தார்.
விநாயகர் கஜமுகனுடன் போர் புரிந்தார். அவன் ஆயுதங்களால் அழியாத வரம் பெற்றவன். விநாயகர் தனது வலக் கொம்பை ஒடித்து சிவமந்திரத்தை உச்சரித்து ஏவ, அது கஜமுகனை சாய்த்தது. அவன் பெருச்சாளி வடிவில் எதிர்த்து வந்தான். விநாயகர் அவன் மீது கருணை புரிந்தார். அவன் அறியாமை அகன்றது. விநாயகரை வணங்கி நின்றான். விநாயகர் அவனை தன் வாகனமாக்கி அருள்புரிந்தார். இதிகாச காவியமான மஹாபாரதத்தை தனது தந்தத்தை எடுத்து எழுதியதன் வாயிலாக விநாயகப் பெருமானே எழுத்துக்கலைக்கு வித்திட்டவர் ஆகிறார்.