Sunday, December 29, 2024

மெட்ரோ ரெயில் நிலையங்களில் விமான பயணிகளுக்கு ‘செக்-இன்’ வசதி – மார்ச் மாதம் சோதனை முறையில் அமல்படுத்த திட்டம்…

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வரும் பயணிகளின் வசதிக்காக சென்னையில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையங்களில் பைகளை சோதனை செய்து அனுப்பும் ‘செக்-இன்’ வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட சில மெட்ரோ ரெயில் நிலையங்களில் மட்டும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மெட்ரோ ரெயில் நிலையங்களில் இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்வதற்காக விமான நிலைய இயக்குனர் சரத்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மெட்ரோ ரெயில் அதிகாரிகள், விமான நிறுவன அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முதல்கட்டமாக விமான நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு அதிகபட்ச தேவை உள்ள மெட்ரோ ரெயில் நிலையங்களில் சோதனை அடிப்படையில் இந்த வசதியை ஏற்படுத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. விமானம் புறப்படுவதற்கு முன்பு பயணிகளின் கூட்டத்தை குறைக்கவும், விமான நிலைய ஊழியர்கள் மற்றும் பயணிகளின் தோள்களில் இருந்து சுமைகளை குறைக்கவும் இந்த வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. அதன்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள கவுண்ட்டரில் பயணிகள் தங்கள் உடைமைகளை சரிபார்த்தவுடன் போர்டிங் பாஸ் வழங்கப்படும். பின்னர் ‘செக்-இன்’ செய்யப்படும் பைகள் சோதனைக்கு பிறகு மெட்ரோ ரெயில் மூலம் விமான நிலையத்துக்கு கொண்டு செல்லப்படும். இதனால் காலதாமதம் இல்லாமல் பைகளை அனுப்ப முடியும். பயணிகளும் தங்களுடைய மதிப்புமிக்க நேரத்தை நகரத்தில் செலவழித்து, விமானத்தில் ஏறுவதற்கு மட்டும் நேராக விமான நிலையத்தை அடையலாம். இந்த புதிய நடைமுறை மார்ச் மாதம் முதல் சோதனை முறையாக அமல்படுத்தப்படும். அப்போது எந்தந்த மெட்ரோ ரெயில் நிலைங்களில் ‘செக்-இன்’ வசதி உள்ளது என்பது குறித்து அறிவிக்கப்படும். ஏப்ரல் 14-ந்தேதி முதல் மெட்ரோ ரெயில் நிலையங்களில் விமான பயணிகளுக்கான ‘செக்-இன்’ வசதி முழுமையாக செயல்படுத்தவும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு கூடுதல் மெட்ரோ நிலையங்களுக்கு ‘செக்-இன்’ வசதி மேலும் விரிவுபடுத்தப்படும். ஆன்லைன் முன்பதிவு இணையதளத்தில் விமான நிலையம் அல்லது மெட்ரோ ரெயில் நிலையத்துக்கான ‘செக்-இன்’ வசதி விருப்பத்தை சேர்க்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Latest article