முட்டை கீமா

0
156

தேவையான பொருட்கள்:
6 முட்டை
2 பெரிய வெங்காயம்
3 தக்காளி
1 கப் பச்சை பட்டாணி
1 பச்சை மிளகாய்
3 பூண்டு பல்
1 துண்டு இஞ்சி
1/2 மேஜைக்கரண்டி சீரகம்
1 மேஜைக்கரண்டி கரம் மசாலா
2 மேஜைக்கரண்டி மிளகாய் தூள்
2 மேஜைக்கரண்டி மல்லி தூள்
1/4 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
1 பிரியாணி இலை
1 நட்சத்திர பூ
2 ஏலக்காய்
2 கிராம்பு
1 துண்டு பட்டை
சிறிதளவு கருவேப்பிலை
சிறிதளவு கொத்தமல்லி
தேவையான அளவு உப்பு
தேவையான அளவு எண்ணெய்

செய்முறை:
முதலில் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, மற்றும் பச்சை பட்டாணியை தயார் செய்து, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி வைத்துக் கொள்ளவும்.
இப்பொழுது ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் முட்டையை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் 6 முட்டைகளை போட்டு சுமார் 10 நிமிடம் வரை அதை வேக விட்டு எடுத்து கூடை உரித்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர் இந்த முட்டைகளை கேரட் துருவியின் மூலம் துருவி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பின்பு நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை மிக்சி ஜாரில் போட்டு அதை நன்கு பேஸ்ட்டாக அரைத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி வைக்கவும்.
அடுத்து ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.
எண்ணெய் சுட்ட பின் அதில் நட்சத்திர பூ, ஏலக்காய், கிராம்பு, பட்டை, பிரியாணி இலை, மற்றும் சீரகத்தை போட்டு வறுக்கவும்.
அது வறுபட்டதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை பட்டாணி, கருவேப்பிலை, மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய், கரம் மசாலா, மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், மற்றும் ஒரு மேஜைக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்டை சேர்த்து நன்கு கிளறி விட்டு இஞ்சி பூண்டு பேஸ்டின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.
இஞ்சி பூண்டு பேஸ்டின் பச்சை வாசம் போனதும் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் தக்காளி பேஸ்ட்டை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
அடுத்து இதில் அரை டம்ளர் அளவு தண்ணீர் விட்டு அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விட்டு அதை சுமார் 4 லிருந்து 5 நிமிடம் வரை வேக விடவும். (முட்டை கீமா நன்கு கிரேவியாக வேண்டும் என்றால் அதற்கேற்றவாறு தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.)
4 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் துருவி வைத்திருக்கும் முட்டைகளை சேர்த்து பக்குவமாக கிளறி விட்டு இறக்குவதற்கு முன் சிறிதளவு கொத்தமல்லியை அதன் மேலே தூவி ஒரு கிளறு கிளறி இறக்கவும்.
இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான முட்டை கீமா தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.