மாசி மாதம் சிறப்புகள்

0
135

மாசி மாதம் மகத்தான மாதம் என்று அழைக்கப்படுகின்றது. இந்த மாதமானது தன்னகத்தே பல சிறப்புக்களைக் கொண்டமைந்து காணப்படுகின்றது. மாசி மாதமானது வழிபாடுகள், பண்டிகைகள், விரதங்கள் என பலவற்றையும் கொண்டமைந்த மாதமாகக் காணப்படுகின்றது. மாசி மாதம் சிறப்புகள் பற்றி இந்த பதிவில் காண்போம்.

மாசி மாதத்தின் சிறப்பு பெயர்கள்.
மாசி மாதத்தில் சூரியன் கும்ப ராசியில் பயணிக்கிறார். “கும்ப மாதம்” என்றும் அழைக்கப்படுகின்றது. மன வலிமை தரக்கூடிய மாதம் மகத்துவம் நிறைந்த மாதம். இம் மாதத்தை “மாங்கல்ய மாதம்” என்றும் கூறுவர்.
பெண்கள் தாலிக் கயிற்றினைப் புதிதாக மாற்றுவதற்கு ஏற்ற மாதமாகும்.
சுிவத்தோடு சக்தி இணைந்து முழுமை பெறுவதால் தன் கணவனின் நலனுக்காக பெண்கள் இந்த மாசி மாதத்தில் தாலிக் கயிற்றினை புதிதாக மாற்றிக் கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள்.

சிவராத்திரி:
மாசி மாதத்தில் மகா சிவராத்திரி கொண்டாப்படுகின்றது. மகா சிவராத்திரி அன்று விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப்போகும் என்பது ஐதீகம்.

மாசி மகம்:
மாசி மாதம் என்பது மாசி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமியுடன் வரக்கூடிய மக
நட்சத்திர நாளில் இந்துக்களால் மிக கோலாகலமாகக் கொண்டாடப்படும் சிறந்த நாளாகும்.

சிவனின் திருவிளையாடல்கள்:
சிவபெருமான் குழந்தை வடிவில் வந்து தமது திருவிளையாடல்கள் மூலம் அருள் புரிந்தது மாசி மாதத்தில் தான் என்பதும் புராண கூற்றாகும்.

அமிர்தம் நிறைந்துள்ள மாதம்:
இந்தியாவில் உள்ள அனைத்து புண்ணியத் தீர்த்தங்களிலும், சமுத்திரக் கரையிலும், புனித நதிகளிலும் மாசி மாதத்தில் அமிர்தம் நிறைந்திருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. இதன் காரணமாகத்தான் நீர்நிலைகளில் புனித நீராடுவதை இந்துக்கள் பழக்கமாகக் கொண்டுள்ளனர்.

கும்பமேளா கொண்டாட்டம்:
இந்து சமயத்தினரால் ஒவ்வொரு பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நான்கு இடங்களில் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் அலகாபாத், அரித்வார், உஜ்ஜைன் மற்றும் நாசிக் ஆகிய நான்கு ஊர்களில் உள்ள ஆற்றுப்படுகையில் நடைபெறும். கங்கையில் நீராடுவதால் தங்களின் பாவங்கள் விலகி, மோட்சம் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

மாசி மாத புண்ணிய பலன்கள்:
மாசி மாதத்தில் நாம் செய்யும் எந்த காரியமும் இரட்டிப்பு பலன்கள் தரும். மாசி மகத்தன்று விரதமிருந்து இறைவனை நம்பிக்கையோடு வழிபட்டு வந்தால் வாழும் வரை ஆரோக்கியத்தோடு, உலகையே ஆளக்கூடிய ஆசி கிட்டும் என்பது ஐதீகம்.

பகவான் மகா விஷ்ணு ஸ்ரீ வராக அவதாரம்:
பகவானின் மிக முக்கிய 10 அவதாரங்களில் மூன்றாவது அவதாரமான வராக அவதாரம் எடுத்து உலகைக் காப்பாற்றியது இந்த மாசி மாத்தில்தான் என்பது மாசி மாதத்திற்கேயுரிய கூடுதல் சிறப்பாகும்.
சாவித்திரி தன் கணவன் உயிரை எமனிடம் இருந்து மீட்ட மாதம். சத்தியவான் மரணமடைய, அவனது உயிரைக் கவர்ந்து சென்ற எமதர்மராஜரிடம் மன்றாடி, போராடி, வாதம் செய்து, தன் கற்பின் சக்தியினால், தன் கணவரின் உயிரைத் திரும்பப் பெற்றாள் சாவித்திரி. இந்த சம்பவம் மாசி மாதக் கடைசி தினத்தில் நிகழ்ந்ததாக, ஸ்ரீமத் மகாபாரதம் கூறுகிறது.

காரடையான் நோன்பு
வீரமும், விவேகமும், பக்தியும் உடைய பெண்ணான சாவித்திரி எமதர்மனிடம் இருந்து கணவனைத் திரும்பப் பெற நோற்ற நோன்பே காரடையான் நோன்பாகும்.
கார் காலத்தில் விளைந்த நெல்லையும், காராமணியையும் கொண்டு உணவினைத் தயார் செய்து விரதமிருந்து வழிபாடு மேற்கொள்ளப்பட்டதால் இது காரடையான் நோன்பு என்றழைக்கப்படுகிறது.
திருமணமான பெண்கள் தங்கள் கணவன் மற்றும் குடும்ப நலன் வேண்டியும், கன்னிப் பெண்கள் நல்ல திருமணப்பேற்றினையும் வேண்டி இவ்விரத முறையை பின்பற்றி வழிபாடு மேற்கொள்கின்றனர்.
இந்நோன்பு மாசி கடைநாளில் ஆரம்பிக்கப்பட்டு பங்குனி முதல் நாளில் முடிக்கப்படுகிறது.