மடிப்பாக்கம் பேருந்து நிலையம் சீரமைப்பது எப்போது…?

0
238

மடிப்பாக்கம் பஸ் நிலையத்திற்கு சுற்றுச் சுவர் அமைக்கப்படாததால், தனியார் வாகனங்களின், “பார்க்கிங்” பகுதியாகவும், இரவில் மாட்டு தொழுவமாகவும் மாறிவிட்டது. ஆக்கிரமிப்பாளர் பிடியில் இருந்து மீட்டு, பஸ் நிலையத்தை சீர்படுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மடிப்பாக்கத்தில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தினமும், ஆயிரக்கணக்கானோர் மாநகர பஸ்களை பயன்படுத்தி, சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள அலுவலகம், பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு, மடிப்பாக்கத்தில் இருந்து சைதாப்பேட்டை, தாம்பரம், கிண்டி, கோயம்பேடு, அம்பத்தூர், பாரிமுனை, அடையாறு, திருவான்மியூர் உள்ளிட்ட சென்னை நகரின் முக்கிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், மடிப்பாக்கம் பஸ் நிலையத்திற்கு கூடுதல் வசதிகள் செய்து தர, பல ஆண்டுகளாக பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.ஆனால், இதுவரை தீர்வு கிடைக்கவில்லை.

ஆனால், பஸ் நிலையம் முழுக்க முழுக்க தனியார் வாகன, “பார்க்கிங்” பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. இதனால், பஸ்கள் திரும்பி நிற்பதற்கு கூட போதுமான வசதிகள் இல்லை. இரவு நேரத்தில் பஸ் நிலையம் மாட்டுத் தொழுவமாக மாறி விடுகிறது. இதுனால், எங்கு பார்த்தாலும் சாணக் கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது. பஸ் நிலையத்தில் போதிய நிழற்குடை இல்லாததால், பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். மழைக் காலத்தில் குளம் போல மழை நீர் தேங்குவதால், பஸ் பிடிக்க வரும் பயணிகள் தவித்து வருகின்றனர்.பஸ் நிலையத்தின் ஒரு பகுதியில் நவீன கழிவறை அமைக்கப்பட்டுள்ளது.

அதை பயன்படுத்த முடியாத நிலையில், சுற்று வட்டாரப் பகுதியில் சகதியுடன் கழிவு நீர் தேங்கியுள்ளது. எனவே, போக்குவரத்து கழகம் தனி கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இது குறித்து பயணியர் சிலர் கூறியதாவது: பஸ் நிலையத்திற்கு போதிய நிழற்குடை, சுற்றுச்சுவர் ஆகியவை அமைக்க வேண்டும். மேலும், அதிகப்படியான பயணிகளை கொண்ட இந்த பஸ் நிலையத்திற்கு ஒரு ‘டைம் கீப்பர்” தேவை. பஸ்கள் வந்து செல்லும் நேரம் குறித்த அறிவிப்பு பலகைகளை நிறுவ வேண்டும். இங்கேயே, ‘சீசன் டிக்கட்” பெறும் வகையில் கவுன்டர் அமைக்க, மாநகர போக்குவரத்துக் கழகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.