Monday, December 23, 2024

மடிப்பாக்கம் சந்திப்பில் போக்குவரத்து சீரமைப்பு…

சென்னை மாநகராட்சியின் பெருங்குடி மண்டலம், மடிப்பாக்கத்தில் பஜார் சாலை, சபரிசாலை, கார்த்திகேயபுரம் சாலை, பொன்னியம்மன் கோவில் சாலை ஆகியவை இணைக்கும் நான்கு முனை சந்திப்பு பிரதானமானது. நான்கு சாலையிலும் மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்த சந்திப்பை சுற்றி, 10க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பள்ளிகள் உள்ளன. குறிப்பிட்ட சந்திப்பில் தினமும் ஆயிரக்கணக்கான இரு சக்கர வாகனங்கள், மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், மாநகர பேருந்துகள் கடந்து செல்கின்றன. பள்ளி நாட்களில் காலை, மாலை வேளைகளில் கடும் போக்குவரத்து நெரிசலும், விபத்துக்களும் நடக்கின்றன. இதற்கு நிரந்தர தீர்வாக குறிப்பிட்ட சந்திப்பில் சிக்னல் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதன் நடவடிக்கையாக, மடிப்பாக்கம் போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் ஹரிதாஸ், சம்பந்தப்பட்ட சந்திப்பில் சிக்னல் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, காலை மற்றும் மாலை என இரு வேளையிலும் போக்குவரத்தை சீர்படுத்த போலீசார் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

போலீசாரின் இந்த நடவடிக்கை, அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest article