சென்னையில் பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமான கழிவுகளை கொட்டுபவர்கள் மீது மாநகராட்சி சார்பில் தொடர்ந்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. ஆதேபோல் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மற்றும் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு அந்த இடங்களில் தமிழ் கலாசாரம், வரலாற்று சிறப்புகள் போன்றவற்றை குறிக்கும் வண்ண ஓவியங்களும் வரையப்படுகின்றன. சென்னையில் கடந்த ஆகஸ்டு மாதம் 18-ந் தேதி முதல் செப்டம்பர் மாதம் 2-ந் தேதி வரை பொது இடங்களில் குப்பைகளை கொட்டியவர்களுக்கு ரூ. 8 லட்சத்து 39 ஆயிரத்து 520-ம், கட்டுமான கழிவுகளை கொட்டியவர்களுக்கு ரூ.6 லட்சத்து 25 ஆயிரத்து 810-ம், விதிகளை மீறி சுவ ரொட்டிகளை ஒட்டிய 211 பேர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு ரூ.97 ஆயிரத்து 700 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் குப்பை, கட்டுமான கழிவுகளை கொட்டுதல், சுவரொட்டிகளை ஒட்டுதல் போன்றவற்றை பொது மக்கள் தவிர்த்து மாநகராட்சியை தூய்மையாக வைத்திருக்க ஒத்துழைக்க வேண்டும். மீறுபவர்களுக்கு ரூ.8 லட்சம் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.