Monday, December 23, 2024

பார்வையாளர்களை ஈர்க்கும் பள்ளிக்கரணை சதுப்புநில பூங்கா…

இம்மாதம் 11ஆம் தேதி அன்று திறக்கப்பட்ட,பள்ளிக்கரணை சதுப்பு நில சூழலியல் பூங்காவிற்கு பார்வையாளர்களின் வருகை அதிகரித்துள்ளது. பெற்றோருடன் பூங்காவிற்கு வரும் சிறுவர்கள், இங்குள்ள பல்வேறு அம்சங்களின் மூலம் சிறந்த பொழுது போக்கு அனுபவத்தை பெறுவதுடன் இயற்கை சார்ந்த பல விஷயங்களை அறிய முடிவதாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.

தமிழக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, பள்ளிக்கரணை சதுப்பு நிலம், 1,729 ஏக்கர் பரப்பு கொண்டது. தென்சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் வடியும் மழைநீர், இந்த சதுப்பு நிலம் வழியாக பயணித்து கடலில் கலக்கிறது. சதுப்பு நிலத்தில் பறவைகள், பாலூட்டிகள், ஊர்வனங்கள், மீன்கள், நத்தைகள், வண்ணத்து பூச்சிகள் என, லட்சக்கணக்கான உயிரினங்கள் இங்கு வாழ்கின்றன. இங்கு, மொத்தமாக, 459 மர வகைகள் உள்ளன. இவை, உயிரினங்கள் வாழ்விடமாகவும், பல்லுயிர் பரவலுக்கும் பயன் படுகின்றன. 2019 மற்றும் 2020ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, 2.35 லட்சம் பறவைகள் சதுப்பு நிலத்தில் கண்டறியப்பட்டுள்ளன.

இந்நிலையில், சதுப்பு நிலத்தின் வடமேற்கு பகுதியில், 6.17 ஏக்கரில், சூழலியல் பூங்கா அமைக்க, தமிழக அரசு, 20 கோடி ரூபாய் ஒதுக்கியது. அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், சதுப்பு நில சூழலியல் பூங்கா, இம்மாதம் 11ஆம் தேதி, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த பூங்காவை சுற்றி, 1,700 மீட்டர் நீளத்தில் பாதுகாப்பு சுவர் கட்டப்பட்டு உள்ளது. பசுமை சூழலுடன் இருப்பதால், பொதுமக்கள் ஆர்வமாக கண்டு களிக்கின்றனர். காலை, மாலையில் நடைபயிற்சியும் செய்கின்றனர். விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகப்படியான மக்கள் பூங்காவில் கூடினர். இயற்கை எழில் கொஞ்சும் வகையில் அமைந்துள்ள சூழலியல் பூங்காவிற்கு பார்வையாளர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக, பூங்கா நிர்வாகம் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளது.

Latest article