Monday, December 23, 2024

பஸ்களில் ரூ.10, ரூ.20 நாணயம் வாங்க மறுத்தால் கண்டக்டர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை…

பஸ்களில் ரூ.10, ரூ.20 நாணயம் வாங்க மறுத்தால் கண்டக்டர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை பஸ் பயணங்களில் ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்கள் புறக்கணிக்கப்படுவதாக போக்குவரத்து துறையிடம் மக்கள் தொடர்ந்து புகார்களை அளித்து வருகிறார்கள். பொதுமக்களின் புகாரை தொடர்ந்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் நேற்று ஒரு அவசர உத்தரவை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து கண்டக்டர்கள், மண்டல-கிளை-உதவி மற்றும் பொதுப்பிரிவு மேலாளர்களுக்கு, சென்னை மாநகர் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- மாநகர பஸ்களில் பயணிகள் டிக்கெட் வாங்க ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை கொடுக்கும்போது, அதனை மறுக்காமல் ஏற்றுக்கொண்டு கண்டக்டர்கள் உரிய டிக்கெட்டுகளை பயணிகளுக்கு வழங்க வேண்டும் என ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையின் மூலம் மீண்டும் அது அறிவுறுத்தப்படுகிறது. எக்காரணம் கொண்டும் பயணிகள் அளிக்கும் ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை பெற்றுக்கொள்ள கண்டக்டர்கள் மறுக்கக்கூடாது. இதனை மீறி ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை வாங்க மறுப்பதாக புகார்கள் எழுந்தால், சம்பந்தப்பட்ட கண்டக்டரின் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து கிளை, உதவி கிளை மேலாளர்கள் மற்றும் அனைத்து நேர காப்பாளர்கள் ஆகியோர் இதுகுறித்து கண்டக்டர்களுக்கு தெளிவாக எடுத்துக்கூறி அவர்களிடம் கையெழுத்து பெற்று எதிர்காலத்தில் இத்தகைய புகார் எதுவும் வராமல் பணிபுரிய அறிவுறுத்த வேண்டும்.

Latest article