Monday, December 23, 2024

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பறவைகள் சரணாலயமாகுமா…?

சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியை பறவைகள் சரணாலயமாக மேம்படுத்த, வனத்துறை முயற்சித்து வருகிறது. ஆக்கிரமிப்புகள், குப்பை கழிவுகளை அகற்றுவது, இத்திட்டத்துக்கு பெரிய சவாலாக அமைந்துள்ளது.

தமிழகத்தில், செங்கல்பட்டு மாவட்டம் வேடந்தாங்கல் உள்ளிட்ட 15 பறவைகள் சரணாலயங்கள், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இதில், 16வது சரணாலயமாக, விழுப்புரம் மாவட்டம் கழுவேலி பகுதி புதிய பறவைகள் சரணாலயமாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. பல்வேறு சவால்கள் இதற்கு அடுத்தபடியாக, சென்னை, பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியை, 17வது பறவைகள் சரணாலயமாக அறிவிக்க, வனத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான சாத்தியக் கூறுகளை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

வனத்துறையும், தமிழக அரசுக்கும் இதில் ஒருமித்த கருத்து நிலவுவதால், பள்ளிக்கரணை புதிய பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்படுவதற்கு நிர்வாக ரீதியான சிக்கல்கள் இல்லை. அதே நேரத்தில், சுற்றுச்சூழல் விதிகள், வன உயிரின விதிகளின் அடிப்படையில், இங்கு பல்வேறு சவால்கள் வனத்துறைக்கு காத்திருக்கிறது. பள்ளிக்கரணை சதுப்பு நிலம், 1,717 ஏக்கர் இது குறித்து பறவைகள் பாதுகாப்பு ஆர்வலர்கள் கூறியதாவது:

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மேம்படுத்தப்பட்டு, பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கும் தகவல் தான். ஆனால், நடைமுறை ரீதியான பிரச்சனைகளை தீர்க்கப்பட வேண்டியது அவசியம். ஒரு குறிப்பிட்ட நீர் நிலை பகுதியில், அதிக அளவில் பறவைகள் வந்தால், அப்பகுதி ஆய்வுகளுக்கு பின் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்படும்.

இதன்படி, நீர்நிலை பிரதான பகுதியாகவும், அதற்கு வெளியில், 3 கி.மீ., வரைசார்பு பகுதியாக இருக்கும். அதன்பின், குறிப்பிட்ட தொலைவு வரை, தாக்க பகுதியாக அறிவிக்கப்படும். தற்போதைய நிலையில், பள்ளிக்கரணை சதுப்பு நிலம், 1,717 ஏக்கர் பரப்பளவு என வரையறுக்கப்பட்டுள்ளது. இதில், 500 ஏக்கருக்கு மேல் தனியார் மற்றும் அரசு துறைகள் ஆக்கிரமிப்பில் உள்ளன. சிக்கல் இந்த ஆக்கிரமிப்புகளை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும்.


அதே போல, சரணாலயத்துக்கு வெளியில், 3 கி.மீ., சுற்றளவுக்காவது தாக்க பகுதியாக அறிவிக்க வேண்டும். இதற்கான இடவசதியை உறுதி செய்வது வனத்துறைக்கு சிக்கலாக உள்ளது.

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் குப்பை கொட்டும் இடம், கழிவு நீர் கலப்பது ஆகியவற்றை முழுமையாக நிறுத்துவதும் வனத்துறைக்கு சவாலாக அமைந்துள்ளது. கடுமையான நடவடிக்கை எடுத்தால் இச்சவால்களை சமாளிக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Latest article