Tuesday, December 24, 2024

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை மீட்டெடுக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு…

ஆக்கிரமிப்புகளையும், குப்பை கிடங்கையும் அகற்றி, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பழைய நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும் என, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அடையாறு முகத்துவாரத்தில் அமைந்துள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலம், குப்பை கிடங்காக மாற்றப்பட்டது. பறவைகள் சரணாலயமாகவும் உள்ள, இதன் பெரும்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.


இதனால், 1965ல், 5,500 ஹெக்டேராக இருந்த இதன் பரப்பளவு, பெருமளவு சுருங்கி விட்டது. “ஆக்கிரமிப்புகளையும், குப்பை கிடங்கையும் அகற்றி பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் அசல் பரப்பளவை மீட்டெடுக்க வேண்டும்” என, வழக்கறிஞர் மேகநாதன் என்பவர், தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார்.

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் ஆக்கிரமிப்புகள் குறித்து பத்திரிகைகளில் வந்த செய்திகளின் அடிப்படையில், பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்டது.

“வீடியோ கான்பரன்ஸ்” வாயிலாக வழக்கை விசாரித்த, தென் மண்டல பசுமை தீர்ப்பாய நீதிபதி கே.ராமகிருஷ்ணன், நிபுணர்குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: சென்னையில், பள்ளிக்கரணை பகுதியில் மட்டுமே சதுப்புநிலம் உள்ளது.

உள்நாட்டிலும், வெளிநாடுகளில் இருந்தும் வரும் ஆயிரக்கணக்கான பறவைகள், நூற்றுக்கணக்கான தாவரங்கள், விலங்குகளின் வாழ்விடமாக இந்த சதுப்பு நிலம் உள்ளது. தனித்துவமான சூழலியல் தன்மை உடைய பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், பெருங்குடி குப்பை கிடங்கும், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையமும் உள்ளன.


குப்பை கிடங்காக மாற்றப்பட்டதாலும், ஆக்கிரமிப்பு கட்டடங்களாலும் இதன் பரப்பளவு, 548 ஹெக்டேராக குறைந்துவிட்டது. இது தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சதுப்பு நிலத்தை மீட்டெடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு உத்தரவிட்டது.

அதன்படி, ஆக்கிரமிப்புகள், குப்பை கிடங்கை அகற்றி, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பழைய நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும். குப்பை கிடங்கை அகற்றி, அந்த இடத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். இப்பகுதியில் நீரின் தரத்தை கண்டறிந்து, சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை விடுவோர் மீது, மாசு கட்டுப்பாடு வாரியம், மாநகராட்சி ஆகியவை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலங்கள் மீட்கப்பட்டு வனத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டதும், அதை சுற்றுச்சூழல், பல்லுயிர் பூங்காவாக மேம்படுத்தி, பறவைகள் சரணாலயமாக மாற்ற வேண்டும். இதற்கு தமிழக அரசும், சம்பந்தப்பட்ட துறைகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Latest article