Monday, December 23, 2024

பள்ளிக்கரணை சதுப்பு நில பூங்காவில் ரூ.281 கோடியில் மேம்பாட்டு பணி…

பள்ளிக்கரணை சதுப்பு நில சுற்றுச்சூழல் பூங்காவில், ரூ.281 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும், என, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் ஒரு பகுதியாக, சுற்றுச்சூழல் பூங்கா சமீபத்தில் திறக்கப்பட்டது. இதில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்து, வனத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் கடந்த வாரம் புதன்கிழமை அன்று ஆய்வு செய்தார். அப்போது, அவர் கூறியதாவது: மொத்தம், 1,400 ஏக்கர் பரப்பிலான பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் இருந்து, 700 ஏக்கர் மீட்கப்பட்டுள்ளது.

இதில், 61 கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட சுற்றுச்சூழல் பூங்கா, சில மாதங்கள் முன் திறக்கப்பட்டது. தற்போது மக்கள் பயன்பாட்டில் உள்ள இப்பூங்காவில், 281 கோடி ரூபாயில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதில், பறவைகள் பாதுகாப்பிற்கான ஏற்பாடுகளும் செய்யப்படும். தமிழகத்தில் நீர் ஆதாரங்கள் மேம்பாட்டு திட்டத்தின் முதல் கட்டமாக, 100 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. இரண்டு ஆண்டுகளில், 2.50 கோடி மரக்கன்றுகள் நட வேண்டும் என்ற இலக்கை அடைவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று அவர் கூறினார்.

Latest article