வேளச்சேரி துணை மின் நிலையத்தில், மின் பகிர்மான இயந்திரங்கள் மூழ்கும் அளவுக்கு மழை நீர் தேங்குவதால், நிரந்தர தீர்வு காண முடியாமல் அதிகாரிகள் திணறுகின்றனர். வேளச்சேரி துணை மின் நிலையம், 70 சென்ட் பரப்பு கொண்டது கடந்த 1970ம் ஆண்டு, 33 கே.வி., திறன் கொண்ட நிலையமாக துவக்கப்பட்டது. மக்கள் தொகை அதிகரித்ததால், 1990ம் ஆண்டு, 110 கே.வி., திறன் கொண்ட நிலையமாக மாற்றப்பட்டது. இங்கிருந்து, வேளச்சேரி பகுதி முழுதும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. இதுபோக, ராஜ்பவன், ஐ.ஐ.டி., வளாகம், ஆலந்தூர், மடிப்பாக்கம், நங்கநல்லூர் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு தலா, 33 கே.வி., திறனில் மின் வினியோகம் செல்கிறது கடந்த 2000ம் ஆண்டுக்குப் பின், மின்நுகர்வு அதிகரித்ததுடன், இதர துணை மின் நிலையங்களுக்கு மின்சாரம் வழங்கும் துணை மின் நிலையமாக இது மாறியது. இந்த துணை மின் நிலையம், வேளச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ளது சாலையை விட, 6 அடி பள்ளத்தில் அமைந்துள்ளது. இதனால், ஒவ்வொரு மழைக்கும், துணை மின் நிலையத்தை மூழ்கடிக்கும் வகையில் மழை நீர் தேங்கும். அதுவும், வடிகால் இல்லாத, வேளச்சேரி பிரதான சாலையில் நீரை இறைத்து விடுவதால் சாலையில் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறுகின்றனர் சாலையும் சேதமடைகிறது. வேளச்சேரி பிரதான சாலையில், வடிகால் கட்டினால் சாலையில் நீர் இறைத்து விடுவது தடுக்கப்படும். இதற்கு, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே வேளையில், கன மழையின் போது வெள்ளம் அதிகமாக தேங்கினால், மின் பகிர்மான இயந்திரங்களை பாதுகாப்பதில் நிலைய அதிகாரிகளுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. இதனால், 24 மணி நேரமும் மோட்டார் கொண்டு இறைத்து நீரை வெளியேற்றுகின்றனர்இதற்கு நிரந்தர தீர்வு காண, மின் பகிர்மான இயந்திரங்களை, 8 அடி உயரத்தில் அமைக்க வேண்டும். இதற்கான, கட்டமைப்பு அமைக்கும் போது, சீரான மின் வினியோகம் வழங்குவதில் சிக்கல் ஏற்படும் சூழல் உள்ளதால், தகுந்த நடவடிக்கை எடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறுகின்றனர். அதே-வேளையில், பெரிய அளவில் மழை நீர் சேகரிப்பு தொட்டி கட்டி, அதில் சேரும் நீரைஇறைத்து வெளியேற்ற முடியுமா என, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.