திறப்பு விழா இன்றி பயன்பாட்டிற்கு வந்தது வேளச்சேரி – தரமணி ரயில்வே சாலை…

0
116

சென்னை வேளச்சேரி – தரமணி ரயில்வே சாலை பணி, கடந்த மாதம் முடிவடைந்த நிலையில், எவ்வித ஆடம்பர விழாவும் இன்றி, அந்த சாலை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டுள்ளது.

வேளச்சேரி – தரமணி ரயில் நிலையங்கள் இடையே, ரயில் தண்டவாளம் அருகில், 3.5 கி.மீ., தூரத்தில், 80 அடி அகல உள்வட்ட சாலை அமைக்க, ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. ஒதுக்கீடு இந்த சாலை வழியாக, வேளச்சேரி, பெருங்குடி, தரமணி சுற்றுவட்டார மக்கள், ரயில் நிலையங்கள் மற்றும் ஓ.எம்.ஆரை எளிதில் அடைய முடியும். ஆதம்பாக்கம், வேளச்சேரி, உள்ளகரம், மடிப்பாக்கம் பகுதிமக்கள், துரித பயணமாக, பெருங்குடி, தரமணி செல்ல முடியும்.

கடந்த ஆறு ஆண்டுக்கு முன், இந்த சாலை அமைக்கும் பணி துவங்கியது. வேளச்சேரி சுற்றுவட்டார பகுதியில் வடியும் மழைநீர், சதுப்பு நிலத்தை அடையும் வகையில், இந்த சாலையின் குறுக்கே, 200 அடி அகலத்தில், நீர்வழிப் பாதை உள்ளது. இந்த இடம் போக, மீதமுள்ள தூரத்தில், 2016ல் சாலை மற்றும் வடிகால் அமைக்கப்பட்டது. நீர்வழி பாதையில் தரைப்பாலம் அமைத்து, சாலையை இணைக்க, 2018ல், ரயில்வே சார்பில், நான்கு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆட்கள் பற்றாக்குறை, கொரோனா ஊரடங்கு, பருவமழை குறுக்கீடு என பல்வேறு காரணங்களால் தடைபட்ட சாலை அமைக்கும் பணி, 2021 ஜூன் மாதம் மீண்டும் துவங்கியது.

கடந்த மாதம், அனைத்து பணிகளும் நிறைவடைந்தன. மகிழ்ச்சி இந்நிலையில், மத்திய, மாநில அமைச்சர்கள், ரயில்வே அதிகாரிகள் முன்னிலையில், திறப்பு விழா நடத்தி, சாலை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், எந்த விழாவும் நடத்தாமல் சாலை பயன்பாட்டிற்கு வந்துள்ளது. புதிய சாலையில் போக்குவரத்து நெரிசல் இன்றி பயணிப்பதாக வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இச்சாலையை மாநகராட்சி வசம் ஒப்படைப்பதற்கான கடிதத்தை அனுப்பியுள்ளதாக, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.