திருப்பணி காண வேண்டும்… பக்தர்களின் எதிர்பார்ப்பு…

0
93

வேளச்சேரி தண்டீஸ்வரம் நகருக்கு அருகே தெலுங்கு பிராமின் தெருவில் பழைமையான வேதநாராயணப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தப் பெருமாள், பிருகு முனிவரால் வழிபடப்பட்டவர். பழைய கோயிலின் கட்டுமானம் இடிபாடுகளுக்கு உள்ளான நிலையில், மூலவர் விக்கிரகங்களை எடுத்துத் தனியே ஆஸ்பெஸ்டால் கூரை ஒன்றின் கீழ் வைத்து வழிபாடு செய்து வருகிறார்கள்.

இந்த விக்கிரகங்கள் மற்றும் பழைய கோயிலின் அமைப்பைக் கொண்டு இந்தக்கோயில் குறைந்தது ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்று சொல்கிறார்கள். அழகுடைய விஷ்ணு மற்றும் உபயநாச்சியார் சிலைகள் காணப்படுகின்றன. பெருமாளையும் தேவியரையும் வணங்குவது போன்ற பிருகு முனிவரின் திருமேனி ஒன்றும் காணப்படுகிறது. இந்தத் தலத்தில் பிருகு முனிவர் நித்திய பூஜை செய்வதாக ஐதிகம்.

இக்கோயிலின் உற்சவ மூர்த்திக்கு வேதநாராயணப் பெருமாள் என்று பெயர் மிகவும் பழைமையானவர். பாதுகாப்பு கருதிஇந்த மூர்த்தியை அருகில் இருக்கும் யோக நரசிம்மர் ஆலயத்தில் வைத்துப் பாதுகாத்து வருகிறார்கள்.

பிரயோகச் சக்கரத்துடன் திகழும் இந்த உற்சவ மூர்த்தியை வேத நாராயணப் பெருமாளை வழிபட்டால், பகை ஒழியும் தீய சக்திகள் விலகும் சகல செல்வங்களும் கைகூடும் என்று நம்பிக்கை பொங்கச் சொல்கிறார்கள் பக்தர்கள்.

ஸ்ரீதேவி – பூதேவி தாயாரோடு அமர்ந்த கோலத்தில் காட்சி கொடுக்கும் மூலவர் பெருமாளின் தோற்றம் மனதைக் கொள்ளை கொள்கிறது. மூலவர் இருக்கும் அறையிலேயே ஸ்ரீராமாநுஜர் மற்றும் தும்பிக்கை ஆழ்வாரின் திருமேனியும் உள்ளன. இந்தக் கோயில் விரைவில் திருப்பணி காண வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பு.