Thursday, November 21, 2024

செல்வம் பெருக வில்வாபிஷேகம்…

      கொடியது கொடியது வறுமை கொடியது என்று நம்முடைய அவ்வை பாட்டியே கூறியிருக்கிறார்கள். அந்த அளவிற்கு மிகவும் கொடுமையான ஒன்றாக தான் வறுமை திகழ்கிறது. இந்த வறுமையை அகற்றுவதற்கு முதலில் முயற்சியை நாம் மேற்கொள்ள வேண்டும். அந்த முயற்சிகள் வெற்றி அடைவதற்கு இறைவனின் அருளை துணையாக பெற வேண்டும். விடாமுயற்சியுடன் இறைவனின் அருளையும் நாம் பரிபூரணமாக பெரும்பொழுது நம்முடைய முயற்சிகள் வெற்றி அடைந்து அதன் மூலம் நம்முடைய செல்வ செழிப்பும் உயரும். இப்படி செல்வ செழிப்பு உயர்வதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான அபிஷேக முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். 

வில்வாபிஷேகம் வழிபாடு
     செல்வ நிலையை வாரி வழங்கக்கூடிய தெய்வமாக திகழ்பவள் தான் மகாலட்சுமி தாயாரும், குபேரரும். ஆனால் குபேரருக்கும் மகாலட்சுமி தாயாருக்கும் செல்வத்தை வழங்கியவராக திகழ்ந்தவர் தான் சிவபெருமான். அப்பொழுது நாம் சிவபெருமானை வழிபட்டோம் என்றால் மகாலட்சுமி தாயாருக்கும் குபேரருக்கும் வழங்கிய செல்வத்தைப் போல நமக்கும் சிவபெருமான் வாரி வழங்குவார் என்று கூறப்படுகிறது.
     அப்படி நமக்கு செல்வ செழிப்பை வாரி வழங்குவதற்கு சிவபெருமானை எந்த முறையில் வழிபட வேண்டும் என்று தெரிந்து கொள்வோம்.சிவபெருமானுக்குரிய தினங்களாக கருதப்படும் திங்கட்கிழமை, பிரதோஷம், சிவராத்திரி போன்ற தினங்களிலும் முருகப்பெருமானுக்கு உகந்த தினங்களான செவ்வாய்க்கிழமை, கிருத்திகை, சஷ்டி, வெள்ளிக்கிழமை போன்ற கிழமைகளிலும் நாம் அபிஷேகம் செய்ய வேண்டும்.
     சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வது என்பது சரி முருகப்பெருமானுக்கு எதற்கு என்று கேட்பவர்களுக்கு ஒரு சிறிய விளக்கம். சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து அக்னி ரூபமாக தோன்றியவர்தான் முருகப்பெருமான். முருகப்பெருமானை வழிபடுபவர்களுக்கு சிவபெருமானின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும் என்று புராணங்கள் கூறுவதால் இந்த அபிஷேகத்தை நாம் சிவபெருமானுக்கும் செய்யலாம் முருகப்பெருமானுக்கும் செய்யலாம்.
     முதலில் ஒரு அகலமான தட்டை அல்லது பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அது நிரம்ப நல்ல தண்ணீரை பிடித்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் உங்கள் கைப்பிடி அளவிற்கு வில்வ இலைகளை போட வேண்டும். இந்த அபிஷேகத்தை நாம் சங்கால் செய்வது மிகவும் விசேஷமாக இருக்கும். சங்கு இல்லாத பட்சத்தில் பஞ்சபாத்திரத்தில் இருக்கக்கூடிய கரண்டியை வைத்தும் இந்த அபிஷேகத்தை செய்யலாம். வேறு பொருட்களில் மூலம் இந்த அபிஷேகத்தை செய்யக்கூடாது.
     நம்முடைய வீட்டில் ஒரு சிறிய சிவலிங்கமோ அல்லது முருகனின் சிலையோ அல்லது வேலோ இருக்கும். இப்படி எது இருந்தாலும் சரி அதை எடுத்து வைத்துக் கொண்டு அதில் இந்த வில்வம் போட்டு வைத்திருக்கும் தண்ணீரை எடுத்து   சிவபெருமானின் பஞ்சாட்சர மந்திரமான “ஓம் நமசிவாய" என்னும் மந்திரத்தை கூறியவாறு அபிஷேகம் செய்ய வேண்டும்.    இப்படி அபிஷேகம் செய்து முடித்த பிறகு அதில் இருக்கக்கூடிய வில்வ இலைகளை வைத்து சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்வதாக இருந்தாலும் இதே பஞ்சாட்சரம் மந்திரத்தை கூறி அபிஷேகமும் அர்ச்சனையும் செய்யலாம். எங்கள் வீட்டில் சிலையும் இல்லை வேலும் இல்லை என்று கூறுபவர்கள், அவர்கள் வீட்டில் கண்டிப்பான முறையில் சிவபெருமானின் படமோ அல்லது முருகப் பெருமானின் படமோ இருக்கும்.
     அந்த படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். அந்த படத்திற்கு முன்பாக மற்றொரு பாத்திரத்தை வைத்து இந்த வில்வ தண்ணீரை எடுத்து அவர்கள் முன்பாக அப்படியே அந்த பாத்திரத்தில் விட வேண்டும். இப்படி செய்வதும் அபிஷேகம் செய்வதற்கு இணையான பலனையே தரும். இப்படி நாம் தொடர்ந்து மனம் உருகி சிவபெருமானையும், முருகப்பெருமானையும் இந்த வில்வத்தைக் கொண்டு அபிஷேக அர்ச்சனை செய்து வந்தோம் என்றால் நம் வாழ்வில் இருக்கக்கூடிய வறுமை நிலை அனைத்தும் மாறும்.
     செல்வ செழிப்புடன் வாழ்வதற்கு நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறுவதற்கு அவர்களின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். இப்படி அபிஷேகம் செய்து முடித்த இந்த தண்ணீரை எடுத்து முதலில் நம் தலையில் தெளித்து விட்டு வீட்டில் இருக்கும் நபர்களின் தலையிலும் தெளித்துவிட்டு வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். மீதம் தண்ணீர் இருக்கும் பட்சத்தில் துளசி, கற்றாழை போன்ற செடிகளில் ஊற்றி விட வேண்டும்.
     மிகவும் சக்தி வாய்ந்த அதே சமயம் எளிமையாக செய்யக் கூடிய இந்த அபிஷேகத்தை தெய்வ நம்பிக்கை இருப்பவர்கள் முழு மனதோடு செய்து அவர்களின் வறுமை நிலையில் இருந்து மாறி மகிழ்வான செல்வ நிலையை பெற முடியும்.

Latest article