Monday, December 23, 2024

செயற்கை நுண்ணறிவு ஆக்கமா? அச்சுறுத்தலா- சிறப்பு பட்டி மன்றம்…

குரு நானக் கல்லூரி(தன்னாட்சி), மொழிப்புலம் – தமிழ்த்துறை கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளையுடன் இணைந்து 24.01.2024 அன்று, அமரர் கல்கி நினைவு நாள் நிகழ்ச்சியினை குரு ராம்தாஸ் கருத்தரங்கக் கூடத்தில் மிகச் சிறப்பாக நடத்தியது. அமர் கல்கியின் இரு நூல்கள் வெளியீடு, பட்டி மன்றம் ஆகியவை இந்நிகழ்ச்சியில் இடம் பெற்றன. நாடறிந்த பட்டி மன்றப் பேச்சாளர் மற்றும் எழுத்தாளர் பாரதி பாஸ்கர்அவர்கள் இந் நிகழ்ச்சிக்கத் தலைமையேற்று, முதுபெரும் எழுத்தாளர் சுப்ர.பாலன் அவர்கள் தொகுத்த கல்கியின் மகாத்மாவுக்கு விண்ணப்பம், சிந்திக்க வைக்கும் சிறுகதைகள் என்னும் இரண்டு நூல்களை வெளியிட கல்லூரி முதல்வர் முனைவர் தி.க. அவ்வை கோதை பெற்றுக் கொண்டார். புதின வரலாற்றில் தலைமைத்துவமாய் இருந்த கல்கி அவர்களின் ஆளுமைத் திறத்தினை மாணவர்கள் எளிதில் புரியும் வகையில் வரலாற்று அடிப்படையில் உணர்வுபூர்வமாக பாரதி பாஸ்கர் அவர்கள் எடுத்துரைத்தார்.மேலும் எழுத்தாளர் கல்கி அவர்களின் இரு நூல்களின் சிறப்புகளையும், கல்கி அன்று கூறிய கருத்துகள் என்றும் பொருந்தக் கூடியதாக உள்ளமையை எதார்த்தமாகக் கூறினார்.

பொன்குடத்திற்குப் பொட்டு வைத்தாற்போன்று ‘பொன்னியின் செல்வன்’ படைப்பு பிரமிப்பு என்றும், கல்கியின் எழுத்தாளுமை நம்மை அக் காலத்திற்கே கொண்டு சென்று அழகிய புரிதலை உணர்த்தும் என்பதையும் சிறப்பு விருந்தினரின் பேச்சின் மூலம் நன்கு அறியமுடிந்தது. நிகழ்ச்சியினைத் தொடர்ந்து செயற்கை நுண்ணறிவு – ஆக்கமா? அச்சுறுத்தலா? என்னும் தலைப்பில் சிறப்பு பட்டி மன்றம் நடைபெற்றது. ‘ஆக்கமே’ என்னும் தலைப்பில் குரு நானக் கல்லூரியின் தமிழ் மன்ற மாணவர்கள் ரா.மோகேஷ்வர், பா.பார்கவி, மா.முருகன் ஆகியோரும், ‘அச்சுறுத்தலே’ என்னும் தலைப்பில் பொ. வள்ளியம்மை, கு.ரேஷ்வதி, ரா.ஜெயபிரகாஷ் ஆகியோரும் தங்கள் கருத்துகளை நடைமுறை வாழ்வியலோடு ஒப்பிட்டுக் காட்டி பார்வையாளர்களை மிகவும் சிந்திக்க வைத்தனர். இந்நிகழ்ச்சியின் இறுதியில் பட்டி மன்ற நடுவர் இரு தரப்பு வாதங்களையும் உள்வாங்கி, செயற்கை நுண்ணறிவு நடைமுறை வாழ்வியலில் பல்வேறு துறைகளில்ஆக்கத்தினை ஏற்படுத்தினாலும், இச் செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் மிகுதியாக உள்ளதால் அச்சுறுத்தலே என்று தீரப்பளித்தார்.

முன்னதாக வாழ்த்துரை வழங்கிய கல்லூரி முதல்வர் முனைவர் தி.க. அவ்வை கோதை அமரர் கல்கியின் வாழ்வியலையும், வரலாற்று நாவல்களில் அவரின் சிறப்பான பங்களிப்பையும் எளிய நடையில் சுருக்கமாகக் கூறினார். மொழிப்புல முதன்மையர் முனைவர் இல.இரா.சு.கலாநிதி நிகழ்ச்சி குறித்து வாழ்த்திப்பேசினார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மு.மூர்த்தி தன்னுடைய வரவேற்புரையில் புதின வரலாற்றில் கல்கியின் நனவாக்கப் பணியினை நன்கு சுட்டிக்காட்டிப் பேசினார். பட்டி மன்றத்தில் சிறப்பாகப் பேசிய ஆறு மாணவர்களுக்கும் பாரதி பாஸ்கர் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கினார். கல்கி கிருஷ்ண மூர்த்தி நினைவு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சீதாரவி அவர்கள் நன்றி கூறினார். தமிழ் மன்றத் துணைத் தலைவர்கள் முனைவர் மு.தியாகராஜ், முனைவர் த.சக்திவேல் இணைப்புரை வழங்கினர். பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இந் நிகழ்ச்சியில் திரளாகக் கலந்து கொண்டனர்.

Latest article