சென்னையில் வெள்ள தடுப்பு பணிகளை முதல்வர் நேரில் ஆய்வு செய்தார்…

0
160


சென்னையில் நடந்து வரும் வெள்ள தடுப்பு பணிகளை, தமிழக முதல்வர் 26ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ஆய்வு மேற்கொண்டு, அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

ஒவ்வொரு ஆண்டு வடகிழக்கு பருவ மழையின் போது, அதிகம் பாதிக்கப்படுவது தென்சென்னை பகுதி. குறிப்பாக வேளச்சேரி, தரமணி, அடையாறு, மடிப்பாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை பகுதிகளில் கடும் பாதிப்பு இருக்கும். கடந்த 2015ல் ஏற்பட்ட வெள்ள பெருக்கின் போது, இப்பகுதி மக்கள் வீடு, உடமைகளை இழந்தனர். பின் தமிழக அரசு, மழைக்காலத்திற்கு முன் வடிகால்கள், நீர் வழித்தடங்களை சீரமைக்க களம் இறங்கியது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தற்போதைய தமிழக அரசும், இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் வேகம் காட்டி, மழையை சமாளிக்க தயாராகி வருகிறது.

இந்த வகையில், சென்னை, காந்தி மண்டபம் சாலையில் தேங்கும் வெள்ளநீர், புற்றுநோய் மருத்துவமனை, அண்ணா பல்கலைகழகம் ஆகியவற்றில் தேங்கும் நீரை அகற்றும் வகையில், 1,5 கி.மீ., நீளத்திற்கு, 4.15 கோடி ரூபாய் மதிப்பில் வடிகால் கட்டப்பட்டுள்ளது. அதன் வழியாக வரும் நீரை, பெரிய கீழ்நிலைத் தொட்டியில் சேகரித்து, சிறு கால்வாய் வழியாக பகிங்ஹாம் கால்வாயில் வெளியேற வழி செய்யப்பட்டுள்ளது. இந்த கால்வாயில் சேர்ந்துள்ள வண்டல் மண் கழிவுகளை, நவீன, ‘ஹைட்ராலிக்” மற்றும் நவீன உறிஞ்சும் திறன், ‘ஜெட்டிங்” இயந்திரத்தால் அகற்றப்படுகின்றன. இப்பணியை தமிழக முதல்வர் 26ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நேரில் பார்வையிட்டார். மேலும், வண்டல் வடிகட்டும் தொட்டிகள், மழைநீர் வடிகால்களை சுத்தம் செய்யும் பணிகளையும் பார்வையிட்டார்.

பின் வேளச்சேரி, கல்கி நகர், வீராங்கல் ஓடையில், 20 லட்சம் ரூபாய் செலவில் தூர் வாரும் பணிகள் 81 லட்சம் ரூபாய் மதிப்பில் வெள்ள நீர் வெளியேற்ற அமைக்கப்பட்டுள்ள, 100 எச்.பி., மோட்டார் பம்ப். ஏ.ஜி.எஸ்., காலனி, கல்கி நகரில், 14.40 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் வடிகால் பணிகள் ஆகியவற்றையும் முதல்வர் பார்வையிட்டார். பின், நாராயணபுரம் ஏரியில், 18.79 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும், வடிகால் பணிகளை பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


தற்போது, நடந்து வரும் அனைத்து பணிகளையும் தினமும் கண்காணித்து, அப்பணிகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை, அனைத்து துறை அலுவலர்களும் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். ஆய்வின் போது, தலைமை செயலர் இறையன்பு, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, அமைச்சர் சுப்பிரமணியன்இ தென்சென்னை எம்.பி., தமிழச்சி, எம்.எல்.ஏ., ஹசன் மவுலானா, மாநகராட்சி தலைமை பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.