சாலையில் உள்ள கழிவுகள் அகற்றப்படாததால் வேளச்சேரி மக்கள் தவிப்பு…

0
141

வேளச்சேரி, ராம்நகர், விஜய நகர் பகுதி சாலையில் தேங்கிய மழை நீர் வடிந்தும், சாலையில் உள்ள கழிவுகளை அகற்றாததால், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் இருந்து வீடு திரும்ப முடியாமல், மக்கள் சிரமப்படுகின்றனர்.

சென்னையில், பெய்த கனமழையால் பல பகுதிகள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக, வேளச்சேரி, விஜய நகர், ராம் நகர் பகுதிகள் கடுமையாக பாதிக்கப் -பட்டன. வீடுகளில் மழை நீர் புகுந்ததால், அங்கு வசித்த பலர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர். வேளச்சேரி பகுதியில் உள்ள, கழிவு நீர் வெளியேற்று நிலையங்களில் இருந்து கழிவு நீரை, வடிகாலில் விட்டதால் தெருக்களில் மழை நீருடன் கழிவுநீர் கலந்தது. இதனால், தெருக்களில் மழை நீர் வடிந்தும், கழிவுநீரில் உள்ள கழிவுகள் சாலைகளில் படிந்துள்ளன. ஆதிலிருந்து துர் நாற்றம் வீசுவதால், சுகாதார சீர்கேடு நிலவுகிறது. இதனால், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தங்கியவர்கள், மீண்டும் தங்கள் வீடுகளுக்கு திரும்ப அச்சப்படுகின்றனர். தூய்மை ஊழியர்கள், குப்பை, மரக் கிளைகளை அகற்றுவதில் முழு கவனத்தையும் செலுத்துவதால், சாலை கழிவுகளை அகற்றவில்லை.

மாநகராட்சி போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மழை நின்ற பின்பும் மக்கள் வீடு திரும்ப முடியாத சூழல் உள்ளதால், சாலை கழிவுகளை அகற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விஜய நகர், ராம்நகர் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.