கோர்ட் சாட்டையடி: வேளச்சேரி நீர்வழித்தட ஆக்கிரமிப்புகள் மீட்பு…

0
132

சென்னை: வேளச்சேரி நீர்வழித்தட ஆக்கிரமிப்பு வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி, வேளச்சேரியில் நீர்வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடித்து இடத்தை மீட்டெடுக்க, வருவாய்த்துறை முடிவு செய்துள்ளது.
வேளச்சேரி – பெருங்குடி இடையேயான, 2.5 கி.மீ., ரயில்வே சாலையில், 150 அடி அகல நீர்வழி பாதை உள்ளது. வேளச்சேரி, தரமணி, கல்லுக்குட்டை, பெருங்குடி, ஐ.ஐ.டி., உள்ளிட்ட பகுதியில் இருந்து வரும் மழை நீர், இந்த நீர்வழி பாதை வழியாக சதுப்பு நிலத்தை அடையும்.ரயில்வே சாலையின் வடக்கு பகுதியில், வேளச்சேரி மற்றும் சோழிங்கநல்லூர் தாலுகாவுக்கு உட்பட்ட, 316, 317, 656, 658 உள்ளிட்ட சர்வே எண்களில், பட்டா மற்றும் அரசு இடங்கள் உள்ளன. ரயில்வேக்கு ஒதுக்கப்பட்ட அரசு இடங்கள், நீர்வழி பாதையில் உள்ளன. இதே நீர்வழி பாதையில், 10 ஏக்கருக்கு மேல் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கி உள்ளது. இதனால், நீர்வழி பாதையில் மழை நீர் செல்வது தடைபட்டது.
கடந்த 1ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது.அறிக்கை தாக்கல் செய்யாத அதிகாரிகளுக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம்உத்தரவிட்டது.இதையடுத்து, நீர்வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டடங்களின் எண்ணிக்கை ஆய்வு செய்யப்பட்டன. சர்வே எல்லை அடிப்படையில் அளக்கப்பட்டன. இந்த பணி, இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. வரும் 10ம் தேதிக்குள், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.