Tuesday, December 24, 2024

குப்பையில் திடீர் தீ விபத்து மக்கள் அவதி…

பள்ளிக்கரணை மேடவாக்கத்தில் குப்பை சேகரித்து வைக்கப்பட்டிருந்த பகுதியில் தீயணைப்பு வீரர்கள் நான்கு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். பள்ளிக்கரணை காவல் நிலையம் பின்புறம், அரசுக்கு சொந்தமான காலியிடம் உள்ளது. இங்கு, மேடவாக்கம் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை கொட்டப்படுகிறது. இப்பகுதியில், தற்போது குடியிருப்புகள் அதிகரித்துள்ளதால், இங்கு கொட்டப்படும் குப்பையால், சுகாதார சீர்கேடு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், செவ்வாய் கிழமை அதிகாலை, 4:00 மணிக்கு இங்கு கொட்டப்பட்டுள்ள குப்பையில் திடீரென தீ பிடித்து கொழுந்து விட்டு எரிந்த தீயால், புகை மூட்டம் பரவியது. அங்கு வசிக்கும் மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இந்த வளாகத்தில், காவல் நிலையத்தில் பறிமுதல் செய்த வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தீயின் வேகத்தை உணர்ந்து, போலீசார் வாகனங்களை அகற்றினர்.

பின், மேடவாக்கம் தீயணைப்பு படையினர், காலை 8:00 மணி வரை போராடி தீயை அணைத்தனர். இங்கு குப்பை கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது பெரும் தீ விபத்து நிகழ்ந்துள்ள நிலையில், இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல் வலுத்துள்ளது.

Latest article